யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் கட்சி இன்னும் முடிவே செய்யவில்லை - சஜித்தை கௌரவித்து பேசுவது ஜனாதிபதியாக்குவதற்கு அல்ல - News View

About Us

About Us

Breaking

Sunday, September 29, 2019

யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் கட்சி இன்னும் முடிவே செய்யவில்லை - சஜித்தை கௌரவித்து பேசுவது ஜனாதிபதியாக்குவதற்கு அல்ல

சஜித் பிரேமதாஸ வருகைதரும் நிகழ்வுகளில், அவர் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்வுகளில் அவரை கௌரவித்து பேசியதற்காக அது அவரை ஜனாதிபதியாக்க வேண்டும் என நாம் கூறவில்லை. ஜனாதிபதியாக எந்த வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என கட்சியே தீர்மானிக்கும் என கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். 

அந்த வகையில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எவ்வித தீர்மானங்களையும் இதுவரை எடுக்கவில்லை. அனைத்து வேட்பாளர்களுடனும் பேசிய பிற்பாடே அது தொடர்பாக ஒரு தீர்மானத்தை எடுக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

முல்லைத்தீவு - குமுழமுனைப் பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் விசேட கலந்துரையாடலில் பங்குபெற்றியிருந் அவரிடம் ஊடகவியலாளர் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாகவும், நிகழ்வுகளில் சஜித் பிரேமதாஸவை ஆதரித்து பேசுவது தொடர்பாகவும் வினவிய ​போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், நாம் பங்கெடுக்கின்ற நிழ்வுகளில், அமைச்சர்கள் வருகின்றபோது அவர்களுக்கு நன்றி செலுத்தி பேசுவது வழக்கம். வேறொரு நிவாரணத்திற்கு ஒரு அமைச்சர் வந்தால், அவர்களையும் நன்றி செலுத்தி பேசுவது வழக்கம்.

அந்த விதத்தில், சில பொதுவான நல்ல கருத்துக்கள் சில வேளைகளில் சொல்லப்பட்டிருக்கலாம். ஆனால் ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமாக கட்சி எந்த முடிவையும் இதுவரை எடுக்கவில்லை. 

யாரை ஆதரிப்பதென்றோ, எவரையாவது ஆதரிக்கவேண்டும் என்று கூட, நாங்கள் இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை. நாங்கள் எல்லா வேட்பாளர்களுடனும், அவர்கள் விரும்பினால், பேச்சுவார்த்தை நடத்துவதென தீர்மானித்திருக்கின்றோம். அப்படி சில சில பேச்சுவாரத்தைகள் நடைபெறுகின்றன. 

ஆகையினாலே அவ்வாறான பேச்சுக்கள் முடிவடைந்த பின்பு, அவர்களது பகிரங்கமான நிலைப்பாடுகளை அவதானித்து ஒரு தீர்மானத்தை எடுப்போம். இதுவரையில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் எந்த தீர்மானங்களும் எட்டப்படவில்லை என்றார். 

மாங்குளம் குறூப் நிருபர்

No comments:

Post a Comment