தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீள கட்டியெழுப்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் துரிதகதியில் முன்னெடுக்கப்படும் - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 3, 2019

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீள கட்டியெழுப்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் துரிதகதியில் முன்னெடுக்கப்படும்

கொட்டக்கலை கிறிஸ்லஸ்பாம் தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீள கட்டியெழுப்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் துரிதகதியில் முன்னெடுக்கப்படுமென கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாத் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிக கூடாரங்களை அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தீ விபத்து குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, தீ விபத்து காரணமாக லயன் தொகுதியில் அமைந்திருந்த 10 வீடுகள் சேதமடைந்ததுடன், இந்த வீடுகளில் குடியிருந்த 10 குடும்பங்களை சேர்ந்த 75 பேர் நிர்க்கதி நிலைக்குள்ளாகியுள்ளனர். 

இவர்கள் கிறிஸ்லஸ்பாம் தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நிவாரண உதவிகளை தோட்ட நிர்வாகமும், கொட்டகலை பிரதேச சபை ஊடாகவும் வழங்கப்பட்டு வருகின்றது.

தற்போது மூன்றாம் தவணைக்காக கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாடசாலையில் ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும், இடப்பற்றாக்குறை காரணமாக கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட மக்களை மாற்று இடத்தில் குடியமர்த்துவதற்கு துரிதகதியில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

மாணவர்களின் பாடபுத்தகங்கள் தீக்கிரையாகியுள்ளது. இதனால் இவர்களுக்கான பாடப்புத்தகங்கள், உபகரணங்கள் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அத்தோடு, தேசிய அடையாள அட்டை, பிறப்பு சான்றிதழ் மற்றும் ஆவணங்கள் சில தீக்கிரையாகியிருப்பதனால் கிராம சேவகர் மற்றும் பிரதேச செயலாளர் ஊடாக ஒரு நடமாடும் சேவையின் மூலம் இதனை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் ஏற்பாடுகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

(ஹற்றன் சுழற்சி நிருபர்)

No comments:

Post a Comment