நாட்டை நேசிக்கும் அனைவரும் நாட்டுக்காக சரியானதொரு முடிவை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 4, 2019

நாட்டை நேசிக்கும் அனைவரும் நாட்டுக்காக சரியானதொரு முடிவை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்

நாட்டை நேசிக்கும் அரசியல்வாதிகள், அறிஞர்கள் மற்றும் மதத் தலைவர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த மக்களும் நாட்டுக்காக சரியான முடிவை மேற்கொண்டு நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்கு துரிதமாக ஒன்று திரள வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

தற்போது நாடு முகங்கொடுத்துள்ள அரசியல், பொருளாதார, சமூக சவால்களை நோக்கும்போது மிக குறுகிய காலத்திற்குள் எவரும் எதிர்பார்க்காத மாபெரும் அதர பாதாளத்தில் நாடு விழுந்துவிடும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, அந்த சவாலிலிருந்து நாட்டை காப்பதற்கு நாட்டை நேசிக்கும் ஒரு குழுவினாலேயே அந்த வீழ்ச்சியிலிருந்து நாட்டை காப்பாற்ற முடியும் எனவும் தெரிவித்தார்.

இன்று (04) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷவின் “பண்ஹிந்தக விப்லவய” (எழுத்தாணியின் புரட்சி) விழாவில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷவினால் எழுதப்பட்ட “ராஜ்ய பாலனயே விகாஷனய சஹ ஸ்ரீ லங்காவே அநாகதய” (அரச நிர்வாகத்தின் பரிணாமம் மற்றும் இலங்கையின் எதிர்காலம், “அவநடுவ” (அநீதி) மற்றும் “அதுருதன் அபேக்ஷகயாகே அபிரஹச” (காணாமற்போன வேட்பாளரின் மர்மம்) ஆகிய 03 நூல்களும் “பெம் பவுர” (காதல் கோட்டை) மற்றும் “சிவுமெலி மல” (மென்மையான மலர்) ஆகிய இருவட்டுகளும் வெளியிடுவதற்காக இந்த விழா நடாத்தப்பட்டது.

உலக உருவான நாள் முதல் இன்று வரை அரச நிர்வாகம் வளர்ச்சியடைந்த விதம், அரச நிர்வாக பொறிமுறைகள், காலத்திற்கேற்ப மக்கள் மீது ஏற்படுத்திய தாக்கம் போன்றவை தொடர்பில் “ராஜ்ய பாலனயே விகாஷனய சஹ ஸ்ரீ லங்காவே அநாகதய” நூலினூடாக கலந்துரையாடலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

“அவநடுவ” சிறுகதை தொகுப்பாகும். “அதுருதன் அபேக்ஷகயாகே அபிரஹச” ஆங்கிலத்திலிருந்து சிங்களத்திற்கு மொழி பெயர்க்கப்பட்ட நூலாகும்.

07 வருடங்களுக்கு முன்பு விஜயதாச ராஜபக்ஷவினால் எழுதப்பட்ட பாடல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்களை ஒன்றிணைத்து “பெம் பவுர” மற்றும் “சிவுமெலி மல” ஆகிய இருவட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

சட்டத்தரணியாக, அரசியல்வாதியாக ஆற்றும் வகிபாகத்திற்கு மேலதிகமாக கலைத்துறைக்காக விஜயதாசவினால் ஆற்றப்படும் சேவையை ஜனாதிபதி பாராட்டினார்.

03 நூல்கள் மற்றும் 02 இருவட்டுகளின் முதற்பிரதிகளை விஜயதாச ராஜபக்ஷ ஜனாதிபதிக்கு இதன்போது வழங்கி வைத்தார்.

மல்வத்து, அஸ்கிரிய அநுநாயக்க தேரர்கள் உள்ளிட்ட மகா சங்கத்தினரும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் சட்டத்துறை மற்றும் கலைத்துறை விருந்தினர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment