இளம் சமுதாயத்தினரின் அபிமானத்தை பாதுகாத்து அவர்களின் எண்ணங்கள் மற்றும் திறன்களை மேம்படுத்துவதற்காக கிராம மட்டத்தில் மேற்கொள்ளப்படும் விரிவான வேலைத்திட்டமாக “ஜீவனாபிமானி” தேசிய வேலைத்திட்டம் ஆரம்பமாகியுள்ளது.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் எண்ணக்கருவிற்கமைய எதிர்வரும் காலங்களில் நாடு பூராவும் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதுடன், அதன் தலைமை செயலகம் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்னவின் தலைமையில் இன்று (04) முற்பகல் கொழும்பு லேக்ஹவுஸ் கட்டிடத்தில் நிர்மாணிக்கப்பட்டது.
இளைஞர், யுவதிகளின் பிரச்சினைகளை கண்டறிந்து அவற்றுக்கு தீர்வளித்து சிறந்ததோர் எதிர்காலத்தை அவர்களுக்கு உருவாக்குவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கமாவதுடன், போதைப்பொருளுக்கு அடிமையான இளைஞர், யுவதிகளை அதிலிருந்து விடுவித்து சிந்தனை விருத்தியின் மூலம் சமூகத்திற்கு பயனுள்ள பிரஜைகளாக அவர்களை கட்டியெழுப்புவது தொடர்பிலும் இந்நிகழ்ச்சியின் மூலம் விரிவான கவனம் செலுத்தப்படவுள்ளது.
மக்களை மையப்படுத்திய வேலைத்திட்டங்களின் ஊடாக அவர்கள் வாழும் சூழலிலேயே இளைஞர், யுவதிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வளித்து சிறந்த எதிர்காலத்திற்கான பின்புலத்தை ஏற்படுத்துவது இந்நிகழ்ச்சியின் விசேட அம்சமாகும்.
மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன, இளம் சமுதாயத்தினருக்கு சிறந்ததோர் நாளைய தினத்தை உருவாக்கிக்கொடுப்பது. அரசாங்கத்தின் முக்கிய கடமையாகுமெனத் தெரிவித்தார்.
போதைப்பொருள் பாவனையினால் இளம் சமுதாயத்தினர் அழிவடைவதாகத் தெரிவித்த ஜனாதிபதியின் செயலாளர், சட்டவிரோத போதைப்பொருளை நாட்டிலிருந்து முற்றாக ஒழிப்பதற்கு ஜனாதிபதி அவர்களின் வழிகாட்டலின் கீழ் இடம்பெறும் பாரிய வேலைத்திட்டங்களுடன் இணைந்ததாக போதைப்பொருளினால் அழிவடைந்த இளைஞர்களின் வாழ்க்கைக்கு புத்துணர்ச்சியளிக்கும் வகையில் வேலைத்திட்டமொன்று அவசியமாகுமெனவும் தெரிவித்தார்.
“ஜீவனாபிமானி” புதிய நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக மேற்குறிப்பிட்ட விடயத்திற்கு பாரிய பங்களிப்பு கிடைக்குமென தெரிவித்த ஜனாதிபதியின் செயலாளர், இந்த நிகழ்ச்சியை வெற்றிபெறச் செய்வதற்கு அனைத்து பிரஜைகளின் ஒத்துழைப்பும் அவசியமெனத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment