எஸ்.எம்.எம்.முர்ஷித்
மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் வாகனேரி ஜப்பார் திடல் பகுதியில் வசிக்கும் மக்கள் எந்தவிதமான அடிப்படை வசதிகளுமற்ற நிலையில் வாழ்வதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
வாகனேரி ஜப்பார் திடல் பகுதியில் 1948ம் ஆண்டுக்கு முன்னர் இங்கு முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு இங்கு வாழ்ந்து வந்தமைக்கான காணி உறுதிப்பத்திரம் 1956ம் ஆண்டு வழங்கி வைக்கப்பட்டது. இங்கு 85 குடும்பமாக 217 பேர் வாழ்ந்து வந்தனர்.
அத்தோடு 1985ம் ஆண்டு ஏற்பட்ட வன்செயல் காரணமாக இவர்கள் இடம்பெயர்ந்து காவத்தமுனை பகுதியில் வாழ்ந்து மீண்டும் 1988ம் ஆண்டு மீள ஜப்பார் திடல் பகுதியில் குடியேறினார்கள்.
பின்னர் 1990ம் ஆண்டு யூன் மாதம் இடம்பெற்ற வன்செயல் காரணமாக இவர்கள் மீண்டும் இடம்பெயர்ந்து காவத்தமுனை பகுதியில் வாழ்ந்து 1994ம் ஆண்டு மீள குடியேறினார்கள்.
மேலும் 1996ம் ஆண்டு ஏற்பட்ட வன்செயல் காரணமாக இவர்கள் இடம்பெயர்ந்து காவத்தமுனை பகுதியில் தற்காலிகமாக வாழ்ந்து வந்த நிலையில் நாட்டின் ஏற்பட்ட சமாதானத்தினை தொடர்ந்து 2006ம் ஆண்டு மீள ஜப்பார் திடல் பகுதியில் குடியேறி தற்போது அங்கு வாழ்ந்து வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஜப்பார் திடல் பகுதியில் வாழ்ந்தமைக்கான ஆதாரமாக 1983ம் ஆண்டு வதிவிட வாக்காளர் இடாப்பு இவர்களுக்கு உள்ளதாகவும், எங்களது ஜீவனோபாய தொழிலை நாங்கள் மேற்கொண்டு வந்ததாகவும் ஜப்பார் திடல் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
எமது கிராமத்தில் அண்மித்து காணப்படும் இத்தியடி விநாயகர் ஆலயத்தில் அண்மையில் ஆலய சுற்றுமதில் மற்றும் ஆலய புனித தன்மையை சேதமாக்கியது முஸ்லிம்கள் என சிலரால் பொய்யான வார்த்தைப் பிரயோகங்களை பாவித்தனர்.
ஆனால் உண்மையான ஒரு முஸ்லிம் எந்தவொரு மதஸ்தலத்தின் புனித தன்மையினை கலங்கப்படுத்த மாட்டான். ஆனால் இது தமிழ், முஸ்லிம் மக்களின் உறவுகளை குழப்பும் வகையில் இடம்பெற்ற சதிவலைகள் என மக்கள் தெரிவிக்கின்றனர்.
நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மீள்குடியேறி வாழ்ந்து வரும் எங்களுக்கு கிரான் பிரதேச செயலகத்தினாலோ அல்லது அரசியல்வாதிகளினாலே எந்தவித உதவிகளும் இதுவரை கிடைக்கப் பெறாமல் வாழ்ந்து வருகின்றோம்.
எனவே வாகனேரி ஜப்பார் திடல் பகுதியில் மீள்குடியேறி வசிக்கும் எங்களுக்கு மீள்குடியேற்றத்திற்கான அடிப்படை வசதிகள் மற்றும் உதவிகளை அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் பெற்றுத் தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
No comments:
Post a Comment