ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு வழங்கப்படவுள்ள பாரிய சம்பள உயர்வுக்கு மேலதிகமாக 5 வருடங்களுக்கு ஒருமுறை அரச சேவைத்துறைக்கு சம்பள உயர்வு மற்றும் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட வேண்டுமென சம்பள முரண்பாடு தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்கான ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி ஆணைக்குழு அரசாங்கத்திற்கு இவ்வாறு பரிந்துரை செய்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதி அமைச்சரவையின் செயலாளராக இருந்த எஸ்.ரனுக்கே தலைமையிலான 15 பேர் கொண்ட சம்பள முரண்பாட்டு ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.
ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட இந்த குழு இதுவரை அரசாங்கத்திற்கு 8 பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.
5 வருடங்களுக்கு ஒருமுறை ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படுவதற்காக அவர்களது சம்பளம் மற்றும் கொடுப்பவனவுகளை மீளாய்வு செய்ய வேண்டும்.
இக்காலகட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட சிலருக்கு மட்டும் முறையற்ற விதத்தில் சம்பள அதிகரிப்பு செய்யப்படக்கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுமென்றும் இந்த ஆணைக்குழு மிகவும் கடுமையாக சுட்டிக்காட்டியுள்ளது.
அரச சேவையில் பல்வேறுபட்ட சேவைப் பகுதியினருக்கு மேலதிக நேரக் கொடுப்பனவு அளவீட்டு முறையில் ஒழுங்குகான நடைமுறை பேணப்பட வேண்டும்.
இதற்காக பொதுவான கொள்கையொன்றை பின்பற்ற வேண்டுமென்றும் ஆணைக்குழு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது என நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.சமரதுங்க தெரிவித்தார்.

No comments:
Post a Comment