ஜனாதிபதித் தேர்தலில் மறைந்த தலைவர் அஷ்ரஃப் காட்டிச் சென்ற வழியையே பின்பற்றப் போகின்றோம் - அமைச்சர் ரவூப் ஹக்கீம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 18, 2019

ஜனாதிபதித் தேர்தலில் மறைந்த தலைவர் அஷ்ரஃப் காட்டிச் சென்ற வழியையே பின்பற்றப் போகின்றோம் - அமைச்சர் ரவூப் ஹக்கீம்

ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பதென்ற விடயத்தில் மறைந்த தலைவர் மர்ஹூம் அஷ்ரஃப் காட்டிச் சென்ற வழியையே பின்பற்றப் போவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். 

குளியாப்பிட்டி தேர்தல் தொகுதியின் சியம்பளாகஸ்கொட்டுவையில் இடம்பெற்ற மர்ஹும் அஷ்ரப்பின் 19 வது நினைவுதின வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு பேசிய அவர் ஐக்கிய தேசியக்கட்சி அதன் வேட்பாளரை அறிவிக்கும் வரையில் நாம் எந்தவொரு முடிவையும் எடுக்கும் நிலையில் இல்லை. 

ஒருவரை ஆதரிக்கச் சொல்வதைவிட நாம் விரும்பாத ஒருவரை ஆதரிக்க வேண்டாமெனச் சொல்வதில் நிறையவே அர்த்தம் நிறைந்திருக்கின்றது.

அந்த வழியைத்தான் எமது மறைந்த தலைவர் காட்டிச் சென்றுள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்கு முகம் கொடுப்பதற்கு நாடு தயாராகின்றது. இதில் சிலர் தடுமாறுகின்றனர். 

கள யதார்த்தங்களில் ஏதோவுள்ள நிலையில் தலைமைகள் வேறு ஏதோ சிந்தனைகளில் இருப்பதைப் போல் தெரிகின்றது. ஆனால் இந்தக் கள யதார்த்தங்கள் பற்றிய எந்த புரிதலுமில்லாமல் குடும்பிச் சண்டை நடந்து கொண்டிருக்கிறது. 

ஜே.ஆர். ஜயவர்த்தனவின் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதற்காக “ஜனநாயக மக்கள் கூட்டணி” என்ற பெயரில் கட்சி உருவாகிச் செயற்பட்டது. அதிலே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்னும் புரட்சிகரமான அரசியல் இயக்கம் இணைந்திருந்தது. 

இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் அதிருப்தி அடைந்த முஸ்லிம்கள் தங்களுடைய அடையாள அரசியலை நிலை நிறுத்துவதற்காக இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபைத் தேர்தல்களில் எங்களுக்குப் புதியதோர் அரசியல் அறிமுகம் கிடைத்தது. 

வட கிழக்கிலே நாங்கள் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியாகவும், வடகிழக்குக்கு வெளியே 12 ஆசனங்களுடன் மொத்தம் 29 மாகாண சபை ஆசனங்களோடு நாங்கள் பலம் பெற்றோம். ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதே அந்தக்காலத்தில் இந்தக் கூட்டணியின் நோக்காக இருந்தது. 

இந்த நேரத்தில் எங்களுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குமான தேர்தல் உடன்படிக்கையில் ஒரு முரண்பாடு வந்தது. அந்த முரண்பாட்டின் பின்னர் இரவோடு இரவாக முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸா எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடாத்தினார். பாராளுமன்றத்துக்கான 12 வீத வெட்டுப்புள்ளியை ஐந்துவீதமாகக் குறைத்ததும் இந்தப் பேச்சுவார்த் தையில்தான். 

1988 ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளருக்கும் ஆதரவளிப்பதாக நாங்கள் சொல்லவில்லை. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க எங்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டார். அவரைத்தவிர யாருக்கும் வாக்களிக்கலாம். இதனைத்தான் நாங்கள் சொன்னோம். 

ஏனென்றால் அந்த நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிக்க சொல்ல முடியாத நிலையிருந்தது. இதனை பிரேமதாசவுக்கும் தெளிவுபடுத்தினோம். அவர் அதனை ஏற்றுக்கொண்டார். இதன் விளைவாகத்தான் பிரேமதாச ஜனாதிபதியானார். இவ்வாறான மாற்றுவழிகளை எங்களுக்கு சொல்லித் தந்த பெருந்தலைவரான மர்ஹும் அஷ்ரஃபையே நாங்கள் நினைவு கூர்கின்றோம் என்றார். 

எம். ஏ. எம். நிலாம்

No comments:

Post a Comment