தற்போது மலையகத்தில் வீடுகள் மற்றும் வியாபார நிலையங்களிலிருந்து அகற்றப்படும் கழிவுகள் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
தினசரி மக்கள் பயன்படுத்தி வெளியேறும் உக்கும், உக்கா கழிவுகளை அகற்றுவதற்கு முறையான வேலைத்திட்டங்கள் எதுவும் இல்லாமையால் மலையகமே குப்பை கூளங்களாக காட்சி கொடுக்கின்றது.
பிரதேச சபைகள், நகர சபைகள், மாநகர சபைகள் என்பன குப்பை கூலங்களை அகற்றுவதில் கையாளும் முறையற்ற செயற்பாடுகள் காரணமாக மக்கள் தமது குப்பைகளை பாதைகளில், நீர் நிலைகளில், பற்றைக்காடுகளில் வீசிவிடுகின்றனர். இதனால் மலையகத்தின் இயற்கையான நீர் ஊற்றுக்கள், நீர் நிலைகள், வளமான மண், ரம்மியமான சூழல் என்பன பாதிக்கப்பட்டடுள்ளது.
இந்நிலையில் ஹற்றன், டிக்கோயா ஆதார வைத்தியசாலை தமது அன்றாட மருத்துவ கழிவுகளை பொகவந்தலாவை - ஹற்றன் பிரதான பாதையில் இருந்து டிக்கோயா ஆதார வைத்தியசாலை வழியாக நியூட்டன் தோட்டத்திற்கு செல்லும் பாதையின் அருகில் குழிகள் தோண்டி அதில் போட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த குழிகளில் மருந்து பொருட்களை தாங்கிய பிளாஸ்டிக், கண்ணாடி, காட்போட், கொள்கலன்கள் மருத்துவ பயன்பாட்டின் பின்னரான கழிவுகள் என்பவற்றை போட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் சில சமயங்களில் இந்த பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் பாடசாலை மாணவர்கள் இந்த பகுதியின் ஊடாக பயணிக்கும் போது இந்த கழிவுகளில் இருந்து விளையாட்டுத்தனமாக சில பொருட்களை எடுத்துவருவதால் பாரிய சுகாதார பிரச்சினைகளும் முகம்கொடுக்க வேண்டியுள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இந்த கழிவுகள் எரியூட்டப்படும் போது வெளியாகும் புகை மற்றும் துர்நாற்றம் காரணமாக தாமும் தமது குழந்தைகளும் பெரும் சிரமத்திற்கு உள்ளாவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் இந்த கழிவுகளை அறைகுறையாக எரிந்த பிறகு மழை காலத்திலும் துர்நாற்றம் வீசுவதாகவும் அவர் தெரிவிக்கின்றனர்.
அதுமட்டுமின்றி மருத்துவ கழிவுகளால் நீர்ஊற்றுகளும் பாதிப்படைவதால் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்வது கேள்விக்குறியாகியுள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
எனவே வைத்தியசாலை நிர்வாகம் தமது மருத்துவ கழிவுகளை முறையாக அகற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பிரதேச குடியிருப்பாளர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
(கொட்டகலை நிருபர்)
No comments:
Post a Comment