ஏனைய பிரதேசங்களில் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக வழங்குகின்ற கடன்களைக் கொண்டு வீடுகளை அமைப்பது போல பெருந்தோட்ட மக்களும் அதை பயன்படுத்திக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். இத்திட்டத்தின் மூலமாக வீடுகளை அமைப்பதற்கு விருப்பமுள்ளவர்களுக்கு தேவையான சகல உதவிகளையும் மலையக மக்கள் முன்னணி ஏற்பாடு செய்து கொடுக்கும் என விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
பெருந்தோட்ட பகுதிகளில் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை ஊடாக வீடுகளை அமைப்பது தொடர்பான கலந்துரையாடலொன்று நேற்றுமுன்தினம் நுவரலியா மாநகர சபை கேட்போர் கூட மண்டபத்தில் நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சரின் ஒருங்கிணைப்பாளர் கனகராஜ் மேற்கொண்டிருந்தார்.
தொடர்ந்து அங்கு கருத்து தெரிவித்த அமைச்சர், பெருந்தோட்ட பகுதிகளில் அமரர் சந்திரசேகரன் தனி வீடுகளை அமைப்பதற்கு ஆரம்பித்தார். அதன் பின்னர் அந்த திட்டம் கைவிடப்பட்டது. 2014ஆம் ஆண்டு நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலக்கட்டத்தில் மீண்டும் இந்த தனி வீட்டுத் திட்டத்தை ஆரம்பிக்க வேண்டுமென நினைத்து தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக கடன் அடிப்படையில் தனி வீடுகளை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஒரு சில தோட்டங்களில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டதன் பின்பு பெருந்தோட்ட அமைப்புக்கு என தனி அமைச்சு உருவாக்கப்பட்டு அதன் மூலம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இதனால் கடன் அடிப்படையில் வீடுகளை அமைப்பதற்கு மக்கள் முன்வரவில்லை. ஆனால் தற்போது மீண்டும் அந்த வீடுகளை பெருந்தோட்ட பகுதிகளில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
இத்திட்டத்தின் மூலமாக வீடுகளை அமைப்பதற்கு விருப்பமுள்ளவர்களுக்கு தேவையான சகல நடவடிக்கைகளையும், மலையக மக்கள் முன்னணி ஏற்பாடு செய்து கொடுக்கும். கட்சி பேதங்களுமின்றி மக்கள் அனைவருக்கும் வீடு கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் நாங்கள் அதனை செய்ய தயாராக இருக்கின்றோம்.
எனவே இத்திட்டத்தின் மூலமாக வீடுகளை பெற்றுக்கொள்ள விரும்புகின்றவர்கள் எங்களுடைய காரியாலயத்தின் மூலம் இதற்கான தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
இந்த விடயம் தொடர்பாக விசேட கவனம் செலுத்தி அதனை நடைமுறைப்படுத்துவதற்கு எனது ஒருங்கிணைப்பாளர் கனகராஜ் என்பவரை நான் நியமித்து இருக்கின்றேன். 077-63338223 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அவரை தொடர்புகொள்ளமுடியும்.
இத்திட்டத்தின் மூலமாக வீடுகளை பெற்றுக் கொள்வதற்கு பல்வேறு நடைமுறைகள் இருக்கின்றது. முதலில் தோட்டங்களிலிருந்து காணியை பெற்றுக் கொள்ள வேண்டும், பின்னர் தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையத்தின் ஊடாக அறிக்கை பெற்றுக் கொள்ள வேண்டும், அதன் பின்னர் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை ஊடாக கடன் அடிப்படையிலும், இலவசமாகவும் வீடுகளை அமைப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் நுவரெலிய கிளை முகாமையாளர் ஏகே பண்டார தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையத்தின் மாலக ஹெட்டியாராச்சி மலையக மக்கள் முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர்கள் மாவட்ட தலைவர்கள் தோட்ட தலைவர்கள் அமைப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நுவரெலியா நிருபர்
No comments:
Post a Comment