தமிழ் மக்களுக்கு சேவையாற்றவில்லை, அவர்களை நடு வீதியில்தான் வீட்டிருக்கின்றீர்கள் - ஆளுநரின் கருத்திற்கு ரவிகரன் பதிலடி - News View

About Us

About Us

Breaking

Wednesday, August 28, 2019

தமிழ் மக்களுக்கு சேவையாற்றவில்லை, அவர்களை நடு வீதியில்தான் வீட்டிருக்கின்றீர்கள் - ஆளுநரின் கருத்திற்கு ரவிகரன் பதிலடி

அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன முல்லைத்தீவிற்கு வருகைதந்த ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும், தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளே இடம்பெற்றுள்ளன. அவ்வாறான செயற்பாடுகள் மூலம் அரச தலைவரும், ஆளுநரும் தமிழ் மக்களை நடு வீதியிலேயே விட்டிருக்கின்றனர் என முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் முல்லைத்தீவில் இடம்பெற்ற திருக்குறள் பெருவிழாவில் கலந்துகொண்ட வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், அரச தலைவரை தாம் மூன்று தடவைகள் முல்லைத்தீவிற்கு அழைத்து வந்ததாகவும், தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் சேவையாற்றுவதே தனது நோக்கம் என்றும் தெரிவித்திருந்தார்.

இது குறித்து ஊடகவியலாளர் ஒருவர் ரவிகரனிடம் கேள்வி எழுப்பியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தமிழ் மக்களுடைய வாக்குகளின் மூலமாகத்தான் இப்போதைய அரச தலைவர் வந்தார் என்பது உலகறிந்த உண்மை. தமிழ் மக்கள், சிறுபான்மையின மக்களுடைய வாக்குளால்தான் மைத்திரிபால சிறிசேன அரச தலைவராக வந்தார்.

ஆளுநருடைய இந்த கருத்தினை முற்றுமுழுதாக மறுக்கின்றேன். இரண்டு தடவைகள் அரச தலைவர் வந்தபோது, முதல்தடவை வருகைதந்தபோது, முல்லைத்தீவு நரில் அமைக்கப்பட்டிருந்த, மூடப்பட்டிருந்த மதுபானசாலை மீண்டும் திறக்கப்பட்டது.

பாடசாலை மாணவர்கள் போராட்டங்களைச் செய்து மூட வேண்டும் என்ற மதுபானசாலை அரச தலைவர் முல்லைத்தீவு வருகைதந்து சென்ற மறுநாள் திறக்கப்பட்டது. அரச தலைவர் சொல்லித் திறக்கப்பட்டதோ, அரச தலைவரின் பிரதிநிதிகள் சொல்லித் திறக்கப்பட்டதோ தெரியவில்லை. எனினும் மறுநாள் இப்படியான சம்பவம் இடம்பெற்றிருந்தது.

இரண்டாவது தடவை வருகை தரும்போது, எங்கள் தமிழ் மக்களுடைய பூர்வீக ஆமையன் குளத்தினை மறுசீரமைப்புச் செய்து, குளத்தினையும் அதன் கீழான வயல் நிலங்களையும் சிங்கள மக்களுக்கு “கிரி இப்பன் வெவ” என்ற பெயரில், வழங்கியதுதான் அரச தலைவர் செய்த சாதனையாகும்.

அதை விடுத்து முல்லைத்தீவிற்கு வருகை தந்து, எமது தமிழ் மக்களுக்குச் சேவையாற்றவில்லை என்பதனைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். மூன்றாவது தடவை திருக்குறள் பெருவிழாவிற்கு இங்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியதெனில், தமிழுக்கும் தமிழர்களுக்கும் சேவையற்றப் போகின்றீர்கள் எனில் அதை சரியான முறையில் செய்யுங்கள்.

மகாவலி இங்கு தமிழ் மக்ளின் பூர்வீக காணிகளை அபகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், அந்தக் காணிகளை மீட்டுக்கொடுக்கும் பணியினை ஆளுனர் செய்ய வேண்டும். இத்தகைய பணியினைச் செய்தாரெனில் அவவருடைய அந்தக் கருத்தினை நாம் ஏற்றுக்கொள்ளலாம். அதை விடுத்து ஏதோ சேவையாற்றுகின்றோம் என்று கூறுவது அப்பட்டமான பொய்யாகும்.

ஏனெனில் அரச தலைவர் முல்லைத்தீவு வருகை தந்த சந்தர்ப்பங்களில், தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளே இடம்பெற்றுள்ளன. எங்களுடைய தமிழ் மக்களை அனியாயமாக நாடு வீதியில் விட்டிருக்கின்றனர் என்பதைத்தான் என்னால் கூற முடியும். என்றார்.

No comments:

Post a Comment