இலங்கையில் தற்போது அமுலில் உள்ள முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ள போதிலும், அதனை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது என மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த சட்டத் திருத்தத்திற்கான அமைச்சரவை அங்கீகாரம் கடந்த 20ஆம் திகதி கிடைக்கப்பெற்றமை தொடர்பில், மனித உரிமை செயற்பாட்டாளர் ஷெரின் ஷாரூரிடம் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
முஸ்லிம் பெண்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் 100 வீதம் நிறைவேற்றப்படவில்லை எனவும் அவர் கவலை வெளியிட்டார்.
முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத் திருத்தத்தை நீதி அமைச்சு செய்யும் போது, முஸ்லிம் விவகார அமைச்சுடன் இணைந்து மேற்கொண்டுள்ளமையினாலேயே, இந்த நிலைமை ஏற்பட்டிருக்கலாம் என அவர் சந்தேகம் வெளியிடுகிறார்.
முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தில் ஏற்படுத்த வேண்டுமென எதிர்பார்க்கப்பட்ட திருத்தங்கள்:
அனைத்து முஸ்லிம்களின் திருமண வயது எல்லை 18ஆக அமைய வேண்டும்.
பெண்கள் காதிகளாகவோ, ஜுரிகளாகவோ, திருமணப் பதிவாளர்களாகவோ, காதிகள் சபை அங்கத்தவராகவோ நியமிக்கப்பட தகுதியுடையவர்களாக ஆக்கப்பட வேண்டும்.
முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டம், அனைத்து முஸ்லிம்களுக்கும் ஒரே மாதிரியாக வேண்டும்.
அனைத்து சட்ட ரீதியிலான திருமணங்களின் போது, மணமகன் மற்றும் மணமகள் ஆகிய இருவரின் கையெழுத்து மற்றும் கைவிரல் அடையாளங்களை கட்டாயமாக பெற்றுக் கொள்ள வேண்டும். திருமண வயதை எட்டிய அனைத்து பெண்களுக்கும் சுயாதீனமாக திருமணத்தை தீர்மானிப்பதற்கு உறவு முறை ஆண்களின் அனுமதியை பெற வேண்டியது கட்டாயம் கிடையாது.
திருமணம், சட்ட ரீதியில் ஏற்றுக் கொள்ளப்படுவதற்காக, கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும்.
ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களை செய்ய முயற்சிக்கும் போது, விசேட காரணங்களின் அடிப்படையில், சாதாரண காரணங்களை கருத்தில் கொண்டு, நிதி இயலுமை, அனைத்து தரப்பினதும் சம்மதம் மற்றும் நீதிமன்றத்தின் அனுமதி உள்ளிட்ட உரிய நிபந்தனைகளை விதிக்க வேண்டும்.
தலாக் மற்றும் பஸஹ் நடைமுறையின் கீழ் விவாகரத்து பெற்றுக் கொள்ளும் போது உரிய நிபந்தனைகள் விடுக்கப்பட வேண்டும். மேல்முறையீட்டு செயற்பாடுகளின் போது கணவர் மற்றும் மனைவி ஆகியோருக்கு விவாகரத்து நடைமுறை சமமாக காணப்பட வேண்டும். முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டம், முபாரத் மற்றும் குலா ஆகிய விதத்தில் விவாகரத்து ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
கைக்கூலி (சீதனம்) தொடர்பான சரியான தகவல்களை பெற்று, விவாகரத்தின் போது, அதனை மீளப்பெற்றுக் கொள்ளும் விதத்தில் சட்டம் தயாரிக்கப்பட வேண்டும். திருமணத்தின் போது, சரியான முறையில் பதிவுகள் செய்யப்படாது, சீதனத்தை வழங்குதல் மற்றும் பெற்றுக் கொள்ளுதல் சட்டவிரோதமானது அல்லது தண்டனைக்குரிய குற்றம் என்ற விதத்தில் அமைய வேண்டும்.
முஸ்லிம் தம்பதியினால் திருமணத்திற்கு முன்னர் திருமண உடன்படிக்கையில் உள்ளடக்க வேண்டிய விடயங்களை அறிவித்து, அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
தம்மால் முன்வைக்கப்பட்ட இந்த கோரிக்கைகள் சிலவற்றிற்கு மாத்திரம் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள போதிலும், அவை கூட முழுமை பெறவில்லை என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ள விடயங்கள் தொடர்பில் மனித உரிமை செயற்பாட்டாளர் ஷெரின் ஷாரூர் கருத்து வெளியிட்டார்.
''ஆண் ஆதிக்கமாக இருந்து, பெண்களே நுழைய முடியாத கட்டமைப்பில் இப்போது, ஜுரிமார், திருமண பதிவாளர்களும், காதி நிர்வாகத்தில் பெண்கள் இருக்கலாம் என்ற அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் காதியாராக பெண்கள் இருப்பதற்கு மட்டும் கொஞ்சம் பின்வாங்குகிறார்கள். இது ஒரு நல்ல விடயம்.
வயது எல்லையே இல்லாது இருந்து முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தில் இப்போது 18 வயது என சொல்லியிருக்கிறார்கள். ஆனாலும் சிறு பிள்ளை திருமணத்திற்கு இன்னும் அந்த சட்டத்தில் இடம் இருக்கிறது. 18 வயதெல்லை என்பது ஒரு முன்னேற்றம் என்றே கருதுகின்றேன். ஆனாலும் அதில் குளறுபடிகள் இருக்கிறது. அதனால் அதை சந்தோஷமான விடயமாக கருதமாட்டேன்.
16 தொடக்கம் 18 வயதுக்குள் திருமணம் செய்யவேண்டுமெனில், காதியாரின் அனுமதி பெறப்பட வேண்டும். பெண்கள் கையெழுத்து வைக்கலாம். ஆனால் அவர்கள் விருப்பத்திற்கு திருமணம் முடிக்க முடியாது. அந்த பெண்ணின் அப்பாவோ அல்லது சகோதரனோ அனுமதி வழங்க வேண்டும். குறித்த பெண் அநாதையாக இருந்தால், அவளுக்காக காதியார் கையெழுத்திடுவார்.
பல திருமணம் செய்வதற்கும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. திருமணம் செய்யும் ஆணுக்கு பண ரீதியில் வலு இருக்கின்றதா?. உடல் வலு இருக்கின்றதா? என்பது அனைத்தும் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனாலும், முதலாவது மனைவியோ அல்லது அதற்கு பிறகு திருமணம் செய்த மனைவிகளிடமோ அனுமதி கேட்க வேண்டும் என்ற சரத்து கொண்டு வரப்படவில்லை. மிக பெரிய பிரச்சினைகளாக நான் இவற்றையே கருதுகின்றேன்" என ஷெரின் ஷாரூர் தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தின் பின்னர், முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத் திருத்தம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஜுலை 11ஆம் திகதி நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் உறுப்பினர்கள் 11 பேர் ஒன்றுகூடி, முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தில் 14 திருத்தங்களை மேற்கொள்ள இணக்கம் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டது.
முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணக்கம் வெளியிட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவெனவும் முஸ்லிம் பெண்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.
பல்வேறு போராட்டங்களை நடத்திய நிலையில், ஈஸ்டர் தாக்குதலுக்கு பிறகே இந்த மாற்றத்தை ஏற்படுத்த இணக்கம் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
எனினும், முஸ்லிம் சமூகம் மாற்றமடைந்து வருகின்றது என்பதை மேலோட்டமாக எடுத்துக்காட்டும் வகையில், ஒரு எலும்பு துண்டை போட்ட மாதிரியே தமக்கு இந்த அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஷெரின் ஷாரூர் குறிப்பிட்டார்.
நாட்டிலுள்ள சாதாரண சட்டத்திற்கு அமைய, முஸ்லிம் சட்டங்களும் மாற்றப்பட வேண்டும் என முஸ்லிம் பெண்ணான பாத்திமா நஷ்ரீன் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
''தற்போதுள்ள முஸ்லிம் திருமண, விவாகரத்து சட்டத்தில் தற்போது பிரச்சினையுள்ளது. நாட்டிலுள்ள ஏனைய இனத்தவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் எமக்கும் கிடைக்க வேண்டும். அனைவருக்கும் ஒரு சட்டம் அமுலாக்கப்பட வேண்டும். நாட்டில் தற்போதுள்ள பிரச்சினையுடன் ஒப்பிடுகையில் இந்த பிரச்சினையும் பெரிதாக காணப்படுகின்றது.
திருமணமான முஸ்லிம் பெண்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். முஸ்லிம் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் முஸ்லிம் பெண்களே கருத்து வெளியிட முடியாத நிலைமை காணப்படுகிறது. அதனால் நாட்டிலுள்ள சாதாரண சட்டத்திற்கு உட்பட்ட வகையில் முஸ்லிம் சட்டங்களும் திருத்தப்பட வேண்டும்" என பாத்திமா நஷ்ரீன் தெரிவிக்கிறார்.
இதேவேளை, முஸ்லிம் திருமண விவாகரத்து விடயத்தில் பெண் காதிமார் கட்டாயம் அத்தியாவசியமானவர்கள் என எழுத்தாளர் சிமாரா அலி தெரிவிக்கிறார்.
பெண்களுக்கான சில விடயங்களை தயக்கமின்றி பேசுவதற்கு பெண் காதியர்களின் நியமனம் கட்டாயமானது என அவர் சுட்டிக்காட்டுகிறார்.
அத்துடன், திருமண விவகாரத்தில் மன முதிர்ச்சி முக்கியமானது என்கிறார் சிமாரா அலி.
இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினரான பைசர் முஸ்தபாவிடம், தொடர்புக் கொண்டு வினவியபோது.
புதிய அமைச்சரவை பத்திரத்தின் ஊடாக முஸ்லிம் பெண்களின் கோரிக்கை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினரான பைசர் முஸ்தபா தெரிவிக்கின்றார்.
முஸ்லிம் திருமண விவாகரத்து கட்டமைப்பிற்குள் பெண் காதியர்கள் உள்வாங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே தான் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த சட்டமூலத்தை கொண்டு வரும் போது, செயற்குழுவில் திருத்தங்களை கொண்டு வருவதற்கும் தான் தயாராகவே உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா குறிப்பிடுகின்றார்.
முஸ்லிம் பெண்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் 100 வீதம் நிறைவேற்றப்படாத போதிலும், அவர்களின் பெரும்பாலான கோரிக்கைகள் இந்த அமைச்சரவை பத்திரத்தின் ஊடாக நிறைவேற்றப்பட்டுளளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினரான பைசர் முஸ்தபா தெரிவிக்கிறார்.
அமைச்சரவை பத்திரத்தை தயாரிக்கும் இறுதித் தருணத்தில், பெரும்பான்மை உறுப்பினர்கள் வழங்கிய அனுமதிக்கு அமைவாகவே இந்த அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறிய நாடாளுமன்ற உறுப்பினரான பைசர் முஸ்தபா, அந்த அமைச்சரவை பத்திரத்திலும் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர வேண்டிய நிலைமை காணப்படுவதாக குறிப்பிட்டிருந்தார்.
பிபிசி தமிழ்
No comments:
Post a Comment