இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் போராட்டம் - முக்கிய கோரிக்கைகள் என்ன? - News View

About Us

About Us

Breaking

Saturday, August 31, 2019

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் போராட்டம் - முக்கிய கோரிக்கைகள் என்ன?

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினம் நேற்று (வெள்ளிக்கிழமை) கடைபிடிக்கப்பட்டது.

பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு அல்லது பாதுகாப்பு பிரிவினரிடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் நீதியைக் கோருவதோடு, இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினத்தை, இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக கடைபிடித்து வருகின்றனர்.

இலங்கையின் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் 2009ஆம் ஆண்டு மே மாதம் நிறைவடைந்த நேரத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த பலர் பாதுகாப்பு பிரிவினரிடம் சரணடைந்தனர்.

இவ்வாறு சரணடைந்த ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாக வடக்கு கிழக்கு வாழ் தமிழர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.

வடக்கு மாகாணத்தில் கடந்த 10 வருடங்களில் தொடர்ச்சியாக சுழற்சி முறையிலான போராட்டங்கள் பல முன்னெடுக்கப்பட்டிருந்த போதிலும், இன்றுவரை காணாமல் போனோர் தொடர்பான எந்தவித தகவல்களும் உறவினர்களுக்கு கிடைக்கவில்லை.
காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் திறப்பு
இலங்கையில் காணாமல் போனோரை கண்டறிவதற்காக அரசாங்கத்தினால் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் 2017ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.

காணாமல் போனோரையும், காணாமல் ஆக்கப்பட்டோரையும் தேடி கண்டுபிடித்தல் மற்றும் அவர்கள் காணாமல் போனதற்கான சூழ்நிலையை கண்டறிதல் ஆகியன இந்த நிறுவனத்தின் நோக்கமாகும்.

இந்த நிலையில், குறித்த அலுவலகம் திறக்கப்பட்டு, வடக்கில் மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் அலுவலகங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன், மாத்தறை பகுதியிலும் ஓர் அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனோரை கண்டறிவதற்கான பல முயற்சிகள் இந்த நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம்
இந்த நிலையில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தமக்கு நீதி கோரி கல்முனை, வவுனியா உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்ட பேரணிகளை முன்னெடுத்தனர்.

அந்த வகையில், அம்பாறை மாவட்டம் கல்முனையில், காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களும், காணாமல் போனோருக்கு நீதி கோரும் அமைப்புகளும் ஒன்றிணைந்து நேற்று கவன ஈர்ப்பு பேரணியொன்றில் ஈடுபட்டனர்,

அதிகளவானவானோர் கலந்து கொண்ட இந்தப் பேரணியில், காணாமல்போனவர்களின் படங்களை, அவர்களின் உறவினர்கள் ஏந்தியிருந்ததோடு, பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் காட்சிப்படுத்தியிருந்தனர்.

கல்முனை தரவைப் பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற மத வழிபாடுகளையடுத்து ஆரம்பமான இந்தப் பபேரணி, கல்முனை உப பிரதேச செயலகம் வரை சென்றடைந்தது.

இந்த நிலையில் அங்கு வருகை தந்திருந்த பிரதேச செயலாளர் ரி.ஜே. அதிசயராஜ் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஏ.எல். இஸ்ஸதீன் ஆகியோரிடம், தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றினை பேரணியில் கலந்து கொண்டோர் கையளித்தனர். வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் அமைப்பின் பெயரில் இந்த மகஜர் எழுதப்பட்டிருந்தது.

இலங்கை ராணுவத்தினரும், அவர்களுடன் இணைந்து செயற்பட்ட ஒட்டுக்குழுவினரும் தமது உறவுகளை கடத்தியும் கைது செய்தும் காணாமல் ஆக்கியதாக குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அரசாங்கத்திடம் நீதி கோரி மகஜர்களைக் கையளித்து, பல போராட்டங்களை தாம் முன்னெடுத்துள்ள போதும், அதற்கு அரசாங்கம் செவி சாய்ப்பதாக இல்லை என்று, போராட்டத்தில் கலந்து கொண்டோர் இதன்போது தெரிவித்தனர்.

மேலும், தமது குரல் சர்வதேசத்துக்குக் கேட்கவில்லையா எனவும் பேரணியில் ஈடுபட்டோர் கேள்வியெழுப்பினர்.

இதன்போது வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினுடைய அமைப்பின் பிரதிநிதி ஊடகங்களிடம் பேசுகையில்; "நாட்டில் ஆட்சி மாற்றமொன்று ஏற்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளன. அதற்கு முன்னர், எங்கள் கோரிக்கைகளை சர்வதேசம் கவனத்தில் கொண்டு, எங்களுடைய உறவுகளை மீட்டுத்தருவதற்கு முயற்சிக்க வேண்டும். அதேவேளை, இந்த விடயத்தில் சர்வதேச விசாரணைகளும் நடத்தப்பட வெண்டும். ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்டால், நாங்களும் காணாமல் ஆக்கப்பட்டு விடுவோம்" என்று கூறினார்.

இந்தப் பேரணில் பல்கலைக்கழக மாணவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களும் இணைந்து கலந்து கொண்டனர்.
குற்றவாளிகள் சட்டத்திற்கு முன்நிறுத்தப்பட வேண்டும்
இவ்வாறான நிலையில், அதி தீவிர அரசியல் நிலைப்பாட்டில் இருந்து கொண்டு இந்த பிரச்சனையை தீர்க்க முடியாது எனவும், ஜனநாயக ரீதியில் பேச்சுவார்த்தைகளின் ஊடாகவே இந்த பிரச்சினையை தீர்க்க அரசாங்கம் முன்வர வேண்டும் எனவும் காணாமல் போனோரை தேடி கண்டறியும் குழுவின் செயலாளர் சுந்தரம் மகேந்திரன் தெரிவிக்கின்றார்.

காணாமல் போனோர் தொடர்பான உண்மைகளைக் கண்டறிய வேண்டும் என்ற நோக்கத்தை கொண்டு அரசாங்கம் செயற்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் தொடர்புடையவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களை சட்டத்திற்கு முன்நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

பிபிசி தமிழ்

No comments:

Post a Comment