முஸ்லிம் மக்களுடைய எல்லைப் பிரச்சனைகளை சீர் செய்வதற்காக நாங்கள் முழு அழுத்தங்களையும் அரசாங்கத்திற்கு செலுத்திக் கொண்டிருக்கின்றோம் என ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.
ஓட்டமாவடி மீராவோடை முச்சக்கரவண்டி சாரதிகள் கூட்டுறவுச் சங்கத்தின் சாரதிகளுக்கு டயர்கள் வழங்கும் நிகழ்வு சங்க அலுவலகத்தில் இடம்பெற்ற போது கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், எங்களது இருப்புக்கள், கடந்த காலங்களில் நாங்கள் வாழ்ந்த இடங்கள், விவசாயம் செய்த இடங்கள், எங்களது மேய்ச்சல் நிலங்கள் என்ற அடிப்படையில் இன்று பேசா மடைந்தையாக நாங்கள் அரசியல் காரணத்தினால் இருந்து கொண்டிருக்கின்றோம்.
நாங்கள் எந்தவொரு சமூகத்திற்கும் எதிர்ப்பாக அல்ல. தமிழ் மக்கள் முற்று முழுதாக ஏற்றுக் கொள்கின்றார்கள். இந்தப் பகுதியில் இவர்கள் வாழ்ந்தவர்கள், இவர்களுக்குரிய காணிகள், வயல் காணிகள் என்று அவர்கள் ஒரு காலமும் மறுக்கவில்லை.
குறிப்பாக கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகத்தின் கீழ் இருக்கின்ற எங்களுடைய காணிகள், மக்களுடைய பிரச்சனைகள் தொடர்பாக அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளிடம் கலந்துரையாடினேன்.
கோறளைப்பற்று மத்தியில் எனது நிதியில் அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்ட பிறைந்துறைச்சேனை வீதியானது கோறளைப்பற்று மத்தியின் கீழ் உள்ளது. வரைபடத்தில் குறித்த வீதி கோறளைப்பற்று மத்தியின் கீழ் காணப்படுகின்றது. ஆனால் இதனை புரியாத சிலர் குழப்பத்தினை ஏற்படுத்தி உள்ளனர். அபிவிருத்தி என்ற ரீதியில் குறித்த வீதியினை அனைத்து சமூகத்தினரும்தான் பயன்படுத்தப் போகின்றார்கள் என்று அபிவிருத்தியை செய்தோம்.
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை, ஓட்டமாவடி பிரதேச சபையாக இருக்கலாம். அல்லது கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகமாக இருக்கலாம், அல்லது வாழைச்சேனை, ஓட்டமாவடி பிரதேச செயலகமாக இருக்கலாம் யாரும் அபிவிருத்தியை செய்யலாம். எனவே இதற்கு தடை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. பேச்சுவார்த்தை மூலம் அனைவரும் நன்மை பெரும் வகையில் செய்திருக்க முடியும்.
எங்களுக்கு எல்லைப் பிரச்சனைகள் இருக்கின்றது. எனவே உரியவர்களிடம் பேசி உரிய முறையில் அதனை செய்வதற்காக நாங்கள் முழு அழுத்தங்களையும் அரசாங்கத்திற்கு செலுத்திக் கொண்டிருக்கின்றோம். இதற்கான ஆவணங்களை குறித்த அமைச்சர்களிடம், அமைச்சின் செயலாளர்களிடம் சமர்ப்பித்துள்ளோம். அத்தோடு இதனை எந்த அளவிற்கு அமுல்படுத்த வேண்டும் என்ற வகையில் ஏற்பாடுகளை செய்திருக்கின்றோம் என்றார்.
சங்கத்தின் தலைவர் எம்.ஜெமீல் மௌலவி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களான எஸ்.ஏ.அன்வர், வீ.ரீ.அன்வர், எச்.எல்.பதூர்தீன், எம்.ஐ.ஹாமித் மௌலவி, எம்.ஐ.இம்தியாஸ், ஏ.ஜி.அஸீஸுல் றஹீம் உட்பட கட்சி முக்கியஸ்தர்கள், வட்டாரப் பிரதிநிதிகள், ஆதரவாளர்கள், அமைப்பின் உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது முச்சக்கரவண்டி சாரதிகள் கூட்டுறவுச் சங்க அங்கத்தவர்களின் மேம்பாட்டைக் கருத்திற் கொண்டு இராஜாங்க அமைச்சரின் சொந்த நிதியிலிருந்து இரண்டு இலட்சம் ரூபாய்க்கு முச்சக்கர வண்டி டயர்களை சாரதிகளுக்கு வழங்கி வைத்ததுடன், சங்கத்தினர் முகங்கொடுக்கும் சவால்கள் மற்றும் வாழ்வாதார மேம்பாடு குறித்தும் நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.
No comments:
Post a Comment