வாசனைத் திரவியங்களின் தரத்தை நிர்ணயம் செய்து கொள்வதற்கு நாடளாவிய ரீதியில் பரிசோதனை கூடங்கள் - News View

About Us

About Us

Breaking

Thursday, August 22, 2019

வாசனைத் திரவியங்களின் தரத்தை நிர்ணயம் செய்து கொள்வதற்கு நாடளாவிய ரீதியில் பரிசோதனை கூடங்கள்

வாசனைத் திரவியங்களின் தரத்தை நிர்ணயம் செய்து கொள்வதற்கு நாடளாவிய ரீதியில் ‘மினிலெப்’ என்ற பரிசோதனை கூடங்களை அமைக்க ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அபிவிருத்தித்துறைப் பணிப்பாளர் ஜனக லின்தர தெரிவித்தார். 

தற்போது 90 கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் சேவைகள் இலவசமாக வழங்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கண்டி கெட்டம்பேயிலுள்ள ஏற்றுமதி விவசாயத்திணைக்கள காரியாலயத்தில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இதுதொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், ஏற்றுமதி வாசனைத் திரவியங்களின் விலைகள் குறைந்துகொண்டு செல்வதாலும், அதனை தடுத்து உற்பத்தியாளர்களுக்கு நியாயம் பெற்றுக் கொடுக்கும் வகையிலும் மேற்படி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் உற்பத்தியாகும் மிளகு, கராம்பு, ஏலம், கோப்பி உட்பட மசாலா பொருட்கள் மற்றும் வாசனைத்திரவியங்களில் 90 சதவீதமானவை வீட்டுத் தோட்டங்களிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. அவற்றின் தர நிர்ணயத்தில் சில குறைபாடுகள் அவதானிக்கப்பட்டு வந்துள்ளன. 

இருப்பினும், தர நிர்ணயமானது அவற்றின் விலையில் பாரிய பாதிப்பை செலுத்தி வருகிறது. அத்துடன் தரம் குறைவதன் காரணமாக ஜரோப்பிய சந்தைகளினூடாக அதிக வருமானத்தை ஈட்டும் நிலை இல்லாமற் போகிறது. இதனால் பாரிய சிக்கல்களுக்கு உற்பத்தியாளர்கள் முகம் கொடுக்க வேண்டியுள்ளது. 

தனியார் துறையில் இவ்வாறான ஆய்வு கூட வசதிகள் இருந்த போதும் அவர்கள் அதிகளவு கொடுப்பனவுகளைப் பெறுவதன் காரணமாக உற்பத்தியாளர்கள் பாதிப்படைகின்றனர். இதனைத் தடுக்கும் வகையில் மேற்படி ‘மினிலெப்’ திட்டம் உதவும் என எதிர்பார்க்கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

(அக்குறணை நிருபர்)

No comments:

Post a Comment