இந்த ஜனாதிபதித் தேர்தலில் தனி நபர்களுக்கு அதிகாரத்தை வழங்கும்பொருட்டு, எவரும் வாக்களித்துவிடக்கூடாது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘சாதாரணமாக முன்னரெல்லாம், தேர்தல் காலத்தில்தான் தேர்தல் சமர் இடம்பெறும்.
ஆனால், இப்போது அது மாற்றமடைந்து தேர்தலுக்கு முன்னரே கட்சிகளுக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சி, உடன்பாடொன்றை ஏற்படுத்தி பாரிய கூட்டணியுடன் தேர்தலில் களமிறங்குவோம் என்று அறிவித்தது.
5 ஆம் திகதி ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதாகவும் அந்தக் கட்சிக் கூறியது. ஆனால், தற்போது பிரச்சினைகள் காரணமாக அனைத்தும் இல்லாது போய்விட்டது.
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக இன்னும் அங்கு போட்டித்தன்மை நிலவிக்கொண்டு வருகிறது. அதேபோல், மஹிந்த ராஜபக்ஷவும் இன்னும் தமது தரப்பில், ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்படவில்லை என்று கூறிவருகிறார்.
கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதே ஒழிய, இன்னும் இறுதித் தீர்மானம் அங்கு எடுக்கப்படவில்லையாம். உண்மையில், வேறு ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க மஹிந்தவுக்கு விருப்பமில்லை.
அவரைப் பொறுத்தவரை அவர் மட்டும்தான் இந்த நாட்டை ஆட்சி செய்ய வேண்டும். இனிமேல் இந்தத் தரப்புக்களை நம்பி பலன் இல்லை. தனித்தனி நபர்களுக்கு அதிகாரத்தைக் கையளிப்பதை விடுத்து, அனைவரும் இணைந்து ஒரு பொதுவான நிலைப்பாட்டுக்கு வரவேண்டும்.
பிரமதாஸவின் பின்னால் சென்றோம். பின்னர் சந்திரிக்காவின் பின்னால் சென்றோம். அடுத்ததாக மஹிந்த, ரணில் என அனைவரின் பின்னாலும் சென்றுவிட்டோம். எனினும், நாட்டை அபிவிருத்தி செய்ய எம்மால் முடியாமல்தான் போனது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment