காணி, வீட்டுரிமை சகிதம் அனைத்து மலையகத் தமிழர்களும் தலை நிமிர்ந்து வாழ வேண்டும். இதற்கான சமூகமாற்றத்தை நோக்கியே எமது எழுச்சிப் பயணம் தொடர்கின்றது என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், இந்து சமய விவகார அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.
ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதேச அலுவலகங்கள் திறப்பு விழா அபிவிருத்தி திட்டங்களை மக்கள் மயப்படுத்தும் நிகழ்வும் எழுச்சிப் பேரணியும் நாவப்பிட்டிய, புஸல்லாவை, தெல்தோட்டை, பன்விலை ஆகிய பகுதிகளில் கடந்த இரு நாட்களாக நடைபெற்றன.
இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், கண்டி மாவட்டத்தில் அரசியல் ரீதியில் கைவிடப்பட்டிருந்த - அநாதைகளாக்கப்பட்டிருந்த தமிழர்களுக்கு ஜனநாயக மக்கள் முன்னணியே அரசியல் தலைமைத்துவத்தை பெற்றுக்கொடுத்தது. இதன் காரணமாகவே இன்று ஏனைய சமூகத்துக்கு நிகரான வகையில் அபிவிருத்திகளையும், உரிமைகளையும் அனுபவிக்ககூடியதாக இருக்கின்றது.
முன்னர் அஞ்சி, கெஞ்சியே அபிவிருத்திகளுக்காக கையேந்தினோம். அத்துடன், தமிழர்கள் திட்டமிட்ட அடிப்படையில் ஓரங்கட்டப்பட்டனர். தேர்தல் காலத்தில் மட்டுமே தமிழர்களின் தலையைத்தடவி, பல உறுதி மொழிகள் வழங்கப்பட்டன. தேர்தல் முடிவடைந்தகையோடு உறுதி மொழிகள் காற்றில் பறக்கவிடப்படும்.
ஆனால், உறுதி மொழிகளை நிறைவேற்றி, கனவுகளுக்கும் உயிர் கொடுக்கும் கறைபடியாத அரசியல் பயணத்தையே நானும், எனது தலைவர் அமைச்சர் மனோ கணேசனும் முன்னெடுக்கின்றோம். தேர்தல் காலத்தில் மட்டுமல்ல அடிக்கடி தோட்டங்களுக்கு வருகை தந்து, கண்காணிப்பு பயணத்தில் ஈடுபட்டு மக்களின் குறைநிறைகளை கேட்டறிகின்றேன்.
தோட்டப் பகுதிகளில் முன்னர் பெரிதாக எதுவுமே நடைபெறவில்லை. அதனால் மக்களும் வாய்திறக்கவில்லை. இன்று பாரிய அபிவிருத்திகள் நடைபெறுகின்றன. எனினும், விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகவே ஒரு சிலர் வீண் பரப்புரைகளை முன்னெடுக்கின்றனர்.
விமர்சிப்பதற்கான சுதந்திரம் கூட எம்மால் கிடைத்தது என்பதை நினைக்கையில் நெஞ்சம் பெருமிதம் அடைகின்றது. அதேவேளை, லயன் அறைகளை முற்றாக அழிந்து - இருண்ட யுகத்திலிருந்து எமது மக்களை மீட்டெடுத்து காணி, வீட்டுரிமை உட்பட அனைத்து உரிமைகளுடனும் அவர்களை வாழ வைக்க வேண்டும் என்பதே எமது பிரதான நோக்கமாக இருக்கின்றது. அந்த இலக்ககை அடைவதற்கான - சமூக மாற்றத்தை நோக்கி பயணிப்பதற்கான எழுச்சி பயணத்தையே நாம் ஆரம்பித்துள்ளோம்.
எத்தடைகள் வந்தாலும், எமது மக்களுக்காக தளராத துணிவோடு களமாடுவோம். அரசாங்கத்தில் அங்கம் வகித்தாலும் மக்கள் பக்கம்நின்றே தீர்மானங்களை எடுப்போம் என்பதை கூறிவைக்க விரும்புகின்றோம்.’’ என்றார்.
No comments:
Post a Comment