மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஈரோஸ் கட்சி ஆதரவு வழங்கியதாக தெரிவிக்கப்படும் செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை என ஈரோஸ் கட்சியின் தலைவர் இரா. பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இன்று (06) காலை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், மஹிந்த ராஜபக்ஷவுடன் ஈரோஸ் இணைந்துள்ளதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. வன்னியில் உள்ள ஈரோஸை சேர்ந்த துஷ்யந்தன் என்பவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்ததாக செய்திகள் வெளிவந்தன.
ஈரோஸ் எந்த பேரினவாத கட்சிகளுடனும் இணையவில்லை, இணையப் போவதும் இல்லை. நாங்கள் யாரையும் ஆதரிப்பது என்றாலும் சில நிபந்தனைகள் உடனேயே ஜனாதிபதி வேட்பாளர்களை ஆதரிக்கும்.
இணைந்த வட கிழக்கு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, வடகிழக்கில் குடும்பங்கள் தலைமை தாங்கும் பெண்களுக்கான வாழ்வாதார உதவிகள், மலையக தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளம் ஆயிரம் ரூபா ஆகிய ஒப்பந்தகளுக்குள் எந்த ஜனாதிபதி வேட்பாளர் வருகின்றாறோ அவர்களுக்கு வட கிழக்கு மலையக தமிழர்கள் வாக்களிப்பார்கள்.
எழுந்தமானமாக கடந்த காலத்தில் வாக்களித்து ஏமாந்த நிலை இனியும் ஏற்படக்கூடாது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்ஷ சின்னப்பையன். அவர் தமிழ் மக்களுக்குள் வந்து தமிழ் கட்சிகளின் முகத்திரையினை கிளிப்பேன் என்று கூறியிருக்கின்றார்.
முதலில் நாமல் ராஜபக்ஷவின் முகத்தில் உள்ள திரையினை கிளியுங்கள். வன்னி யுத்ததின் போது காணாமல்போன இலட்சக் கணக்கானவர்கள் எங்கே?, அப்பாவி தமிழ் இளைஞர்களை சிறையில் அடைத்த நீங்கள் அவர்களின் விடுதலைக்கு நடவடிக்கை எடுத்தீர்களா? நீங்கள் ஓடிய வெள்ளைவானுக்கும் அதில் கடத்திய மக்களுக்கும் கணக்கு இல்லை, அவர்கள் எங்கே என்றும் இல்லை.
நீங்கள் எங்களுக்கு முகத்திரையினை கிழிக்க வர வேண்டாம். நாங்கள் உங்களது முகத்திரையினை கிழிக்க முற்பட்டால் நீங்கள் தாங்க மாட்டீர்கள். உங்களுக்கு யால்ரா போடும் சம்பந்தன், சுமந்திரன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரின் முகத்திரையினை கிளியுங்கள்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ந்து உறுதி மொழிகளை காட்டி தமிழ் மக்களை ஏமாற்றி வருவதாகவும் அவர்கள் தமிழர்கள் என்று சொல்வதற்கு அருகதை அற்றவர்கள். தமிழர்களினால் உருவாக்கப்பட்ட நேர்மையான கட்சி ஒன்றால் தமிழ் மக்களை நேசிக்கும் கட்சியாகவிருந்தால் தமிழ் மக்கள் தொடர்பில் சிந்தித்திருப்பார்கள்.
ஈரோஸை வைத்து பிழைப்பு நடாத்துவதற்கு முற்பட்டவர்களை நாங்கள் கட்சியில் இருந்து இடைநிறுத்தினோம். அவர்களை மஹிந்த அணியுடன் இணைத்துக் கொண்டு, ஈ.பி.ஆர்.எல்.எப். உடன் இணைத்துக் கொண்டு எமது கட்சியை வைத்து பிழைப்பு நடாத்துவதற்கு முற்படுகின்றனர். ஈரோஸை பற்றி கதைப்பதற்கு யாரும் தகுதியில்லை.
எதிர்வரும் தேர்தல்களை முகம் கொடுப்பதற்கு அனைத்து தமிழ் கட்சிகளுடன் இணைந்து பயணிப்பதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். ஒரு பொதுச் சின்னத்தில் போட்டியிடுவதற்கு நாங்கள் தயாராக விருக்கின்றோம். தமிழ் மக்களின் நன்மைக்காக ஈரோஸ் எதனை விட்டுக்கொடுப்பதற்கு தயாராகவுள்ளது.
எமது கட்சியின் பெயரை பாவித்து மஹிந்தவுக்கு ஆதரவு வழங்கியதாக தெரிவிக்கப்பட்டது. தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த நபருக்கு பிடிவிராந்தும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது தெரிவித்தார்.
மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்
No comments:
Post a Comment