3 தசாப்தக் கால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான, முழுமையான ஆயுதங்களைக் கொள்வனவு செய்தும் நாட்டின் பொருளாதாரத்தை தமது அரசாங்கம் பலமான நிலையிலேயே வைத்திருந்தாக, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், “நாட்டின் பொருளாதாரத்தை முற்றாக சீரழித்துவிட்டே, கடந்த கால தரப்பினர் ஆட்சியை ஒப்படைத்தார்கள்.
2005 ஆம் ஆண்டு நான், ஆட்சியை ஒப்படைக்கும்போது இலங்கையின் பொருளாதாரம் சிறப்பான நிலையில் இருந்தது. 3 தசாப்த காலமாக நீடித்த யுத்தத்தை, நிறைவுக்குக் கொண்டுவருவதற்கான அனைத்து ஆயுதங்களும் எனது அரசாங்கத்தின் காலத்திலேயே கொள்வனவு செய்யப்பட்டன.
இவ்வாறான முதலீடுகளை மேற்கொண்டும், எம்மால் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியுமாகவே அன்று இருந்தது. எமது காலத்தில் நாட்டின் தனிநபர் வருமானம் மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டது. அரச சேவையாளர்களின் சம்பளம் 5 மடங்குகளாக அதிகரிக்கப்பட்டன.
இதன் பின்னர், இவ்வாறான முன்னேற்றங்கள் நாட்டில் ஏற்படவில்லை. எந்தவொரு அரசாங்கமும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடவில்லை. தூர நோக்கத்துடன் ஆட்சியை மேற்கொள்ளாதமையே இவற்றுக்கு எல்லாம் காரணமாக கருதப்படுகிறது. அத்தோடு, கொள்ளை, ஊழல்களும் இடம்பெற்றன.
இந்த அரசாங்கமும் சில குற்றங்களை இழைத்திருந்தாலும், கடந்த அரசாங்கத்தின் காலத்தில்தான் பாரியளவிலான குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன” என மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment