திருமண வீடியோவை காண்பித்து தாலி உட்பட 60 பவுண் நகை கொள்ளை - யாழ். நவாலியில் சினிமா பாணியில் துணிகரம் - News View

About Us

About Us

Breaking

Friday, August 30, 2019

திருமண வீடியோவை காண்பித்து தாலி உட்பட 60 பவுண் நகை கொள்ளை - யாழ். நவாலியில் சினிமா பாணியில் துணிகரம்

திருமணத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒளிப்பதிவை காண்பித்து அதில் மணமகளின் தாலி உட்பட பெண்கள் அணிந்திருந்த நகைகள் ஒவ்வொன்றாக கொள்ளையடித்துச் சென்ற சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளது. 

இச்சம்பவம் யாழ்ப்பாணம் நவாலி கொத்துக்கட்டி வீதி நவாலி தெற்கில் 29ஆம் திகதி அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

5 பேர் கொண்ட கொள்ளைக் கும்பலொன்று அதிகாலை திடீரென வீட்டின் முன்வாயில் வழியாகவும் சமையல் அறையின் மேற்பகுதி வழியாகவும் வீட்டுக்குள் நுழைந்துள்ளது. 

வீட்டிலிருந்த பெரிய தந்தை வழிமுறையான ஒருவரைக் கட்டிவைத்துவிட்டு வீட்டில் நடைபெற்ற திருமண நிகழ்வின் வீடியோ ஒளிப்பதிவை காண்பித்துள்ளனர். வீடியோவில் பெண்கள் அணிந்திருந்த தங்க நகைகளை தருமாறு கொள்ளையர் குழு கத்தி முனையில் அங்கிருந்தவர்களை அச்சுறுத்தியுள்ளனர். 

கொள்ளையர்களின் அச்சுறுத்தலுக்கு அடிபணியாததால் வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவரை கொள்ளையர்கள் வாளால் வெட்டியதுடன் தாக்குதலையும் நடத்தியுள்ளனர். அச்சமடைந்த பெண்ணொருவர் சகல நகைகளையும் எடுத்து தருவதாக கூறியுள்ளார். கொள்ளையர்கள் ஒவ்வொரு இடமாகத் தேடி, அனைத்து நகைகளையும் கொள்ளையிட்டுள்ளனர். 

கொள்ளையர்களின் செயல் தொடர்பில் திருமண வீட்டின் மணமகள் கைத்தொலைபேசி மூலம் குறுந்தகல் (SMS) மூலம் அயல் வீட்டுக்காரருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவரும் ஏனையவர்களுக்கு அந்த தகவலை அனுப்பியுள்ளார். 

இதனை அறிந்த கொள்ளைக்கும்பல் வெளியில் நின்ற அயல்வீட்டுக்காரரையும் கத்தியால் வெட்டிக் காயப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது. வீட்டில் இருந்தவர்களின் 60 பவுணுக்கு மேற்பட்ட தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதுடன் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களின் கடவுச் சீட்டுக்களும் கைப்பைகளும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. 

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

யாழ்.விசேட நிருபர்

No comments:

Post a Comment