இன்று (05) இரவு 7.00 மணியிலிருந்து நாளை (06) இரவு 7.00 மணி வரை நாட்டின் வடக்கு, வட மத்திய மற்றும் வட மேல் மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் காற்றின் வேகம் 50 - 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வளி மண்டலவியல் திணைக்களத்தின், இயற்கை அனர்த்தம் தொடர்பான முன்னெச்சரிக்கை மத்திய நிலையத்தினால் விடுக்கப்பட்ட அறிவிப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த காலப்பகுதியில் அம்பாறை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் காற்றின் வேகம் 40 - 50 கிலோ மீற்றராக காணப்படும் என திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அடுத்த சில நாட்களுக்கு, நாட்டின் வடக்கு மற்றும் மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் வடக்கு மற்றும் மத்திய அரேபிய கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70 - 80 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் அவ்வப்போது உயர் அலைகளுடனும் காணப்படும்.
இதேவேளை இன்றிலிருந்து (05) எதிர்வரும் 09ஆம் திகதி வரை வடக்கு மற்றும் மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் இன்றிலிலிருந்து எதிர்வரும் 11 ஆம் திகதி வரை வடக்கு மற்றும் மத்திய அரேபிய கடற்பரப்புகளிலும் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது அதிக இடர் கொண்டது என, மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது
புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசந்துறை ஊடாக முல்லைத்தீவுவரையான கடற்பரப்புகளிலும் பொத்துவிலிலிருந்து மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 60 - 70 கிலோ மீற்றர் வரைஅதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும்.
முல்லைத்தீவிலிருந்து திருகோணமலை வரையான கடற்பரப்புகளிலும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 50 - 55 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படும்.
கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.
No comments:
Post a Comment