நரபலி கொடுக்கப்பட்ட 227 குழந்தைகள் - எலும்புக்கூடு குவியல் கண்டுபிடிப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, August 30, 2019

நரபலி கொடுக்கப்பட்ட 227 குழந்தைகள் - எலும்புக்கூடு குவியல் கண்டுபிடிப்பு

பெரு நாட்டில் நரபலி கொடுக்கப்பட்ட 227 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. பெரு நாட்டின் தலைநகர் லீமாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள கடற்கரை நகரம் ஹூவான்சாகோ.

புகழ்பெற்ற சுற்றுலாதலமான இங்கு கடந்த ஒரு வருடமாக தொல்லியல் ஆய்வாளர்கள் அகழ்வாராய்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில் ஏராளமான புதைபடிவங்கள், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்கள் மற்றும் விலங்குகளின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் ஹூவான்சாகோ நகரில் உள்ள ஒரு கடற்கரையை ஓட்டிய பகுதியில் தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு ஒரே இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. தோண்டிய இடமெல்லாம் எலும்புக்கூடுகள் கிடைத்தன. இப்படி 227 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன.

அந்த எலும்புக்கூடுகளை ஆய்வு செய்தபோது, குழந்தைகள் அனைவரும் நரபலி கொடுக்கப்பட்டு, அவர்களது உடல் அங்கு புதைக்கப்பட்டது தெரியவந்தது. அதாவது அந்த இடம் குழந்தைகளை நரபலி கொடுக்கும் பலிபீடமாகவும், மேலும் அவர்களது உடலை அடக்கம் செய்யும் கல்லறையாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தலைமை தொல்லியல் ஆய்வாளர் பெரன் கேஸ்டிலோ கூறியதாவது கொலம்பியனுக்கு முந்தைய சிமு நாகரீகத்தில் நரபலி கொடுக்கப்பட்ட குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
4 முதல் 14 வயதிலான இந்த குழந்தைகள் அனைவரும் கி.பி. 1,200 இல் இருந்து 1,400 க்கு உட்பட்ட காலக்கட்டத்தில் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

தலைமுடி, தோல்களுடனும் ஒருசில உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பலியிடப்பட்ட குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய தளம் இதுதான்.

கடவுள்களை கௌரவிக்கவும், ‘எல் நினோ’ எனப்படும் மோசமான வானிலையை எதிர்கொள்ளவும் குழந்தைகள் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. தோண்டத் தோண்ட குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கிடைக்கின்றன. எனவே நரபலி கொடுக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாம் நினைத்து பார்க்க முடியாத வகையில் பன்மடங்கு உயரும் என அஞ்சப்படுகிறது.

முன்னதாக கடந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் ஹூவான்சாகோ நகருக்கு அருகே உள்ள பம்பா லா க்ரூஸ் என்ற இடத்தில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 196 குழந்தைகளின் எலும்புகளோடு ஒரு கல்லறையை கண்டுபிடித்தனர்.

No comments:

Post a Comment