“கொழும்பு பாதுகாப்பு மாநாடு 2019” ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம் - News View

About Us

About Us

Breaking

Thursday, August 29, 2019

“கொழும்பு பாதுகாப்பு மாநாடு 2019” ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

இலங்கை இராணுவத்தினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் “கொழும்பு பாதுகாப்பு மாநாடு - 2019” ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (29) முற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) இடம்பெற்றது.

உலகளாவிய பாதுகாப்பு துறையுடன் தொடர்புடைய தரப்பினர்கள், புத்திஜீவிகள் மற்றும் பாதுகாப்புத் துறை விசேட நிபுணர்களின் பங்குபற்றலில் “சமகால பாதுகாப்பு தேவைகளுக்கு மத்தியில் இராணுவத்தினரின் மகத்தான பங்களிப்பு” எனும் தொனிப்பொருளில் இம்மாநாடு இன்றும் (29) நாளையும் (29) கொழும்பில் இடம்பெறவுள்ளது.
நிபுணத்துவ கலந்துரையாடலுக்கு தளம் அமைத்துக்கொடுக்கும் வகையில் இரு நாட்கள் இடம்பெறுகின்ற 2019 கொழும்பு பாதுகாப்பு மாநாட்டில், 13 வெளிநாட்டு புத்திஜீவிகள், 12 உள்நாட்டு புத்திஜீவிகள் உள்ளடங்கலாக 800 பிரதிநிதிகள் பங்குபற்றுவதுடன், தற்போதைய பாதுகாப்பு பின்னணி, முரண்பாடுகள் மற்றும் ஒத்துழைப்பு, பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுதல் மற்றும் தற்கால பாதுகாப்பு பின்னணியில் இராணுவத்தினரை தயார் நிலையில் வைத்திருத்தல் போன்ற உப தலைப்புகளின் கீழ் இம்மாநாட்டில் கலந்துரையாடப்படவுள்ளன.

2019 கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் அனைத்து ஏற்பாடுகளும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் பூரண மேற்பார்வையின் கீழ் நடைபெறுவதுடன், பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொடவினால் மாநாடு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மாநாட்டின் வரவேற்புரையை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆற்றியதுடன், மாநாட்டின் தொடக்க உரை ஹவாய் தீவிலுள்ள பாதுகாப்பு கற்கைகளுக்கான ஆசிய பசுபிக் மத்திய நிலையத்தின் பழைய மாணவரும் ஊடகவியலாளரும் உபாய மார்க்கங்கள் பற்றிய பகுப்பாய்வாளரும் இராணுவ வரலாறு பற்றிய நூலின் ஆசிரியருமான நிதின் ஏ. கோகலே (Mr.Nitin A.Gokhale) ஆற்றினார்.

வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க உள்ளிட்ட அரச அதிகாரிகள், பாதுகாப்பு பதவிநிலைப் பிரதானி உள்ளிட்ட முப்படைத் தளபதிகள், முன்னாள் இராணுவத் தளபதிகள் மற்றும் பாதுகாப்புத் துறை சிரேஷ்ட அதிகாரிகள் இம்மாநாட்டில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment