தீவிரவாத தடுப்பு பிரிவின் (TID) கட்டுப்பாட்டில் வைக்கபட்டுள்ள, கைதான சின்னையா சிவரூபனிடமிருந்து இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து, 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இராணுவ அதிகாரிகளால் கடந்த 18 ஆம் திகதி கைது செய்யப்பட்ட, பளை வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியாக கடமையாற்றி வந்த சின்னையா சிவரூபன், தீவிரவாத நடவடிக்கை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.
அதன் பின்னர் அவர் அன்றையதினமே (18) யாழ்ப்பாணம் தீவிரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.
குறித்த சந்தேகநபரிடமிருந்து இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், TID யினால் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
சின்னமணி கணேஷ்வரன், இரத்தினம் கிருஷ்ணராசா, மோகனசுந்தரம் சின்னதுரை, விநாயகமூர்த்தி நெஜிலன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான சந்தேகநபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக, கொழும்பு தீவிரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவொன்று யாழ்ப்பாணம் சென்றுள்ளதோடு, குறித்த பிரதான சந்தேகநபரான சின்னையா சிவரூபனிடமிருந்து பெறப்பட்ட மேலதிக தகவல்களின் அடிப்படையில் AK47 உள்ளிட்ட ஆயுதங்கள், வெடிமருந்து, கைக்குண்டுகள் உள்ளிட்ட பொருட்களை பொலிஸார் அண்மையில் மீட்டிருந்தனர்.
அது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் நேற்றையதினம் (28) மேலும் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, ருவன் குணசேகர தெரிவித்தார்.
ரி. நிமலராஜ், ரூபன் ஜதுசன் ஆகிய சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய திட்டம் தீட்டியமை தொடர்பில், இச்சந்தேகநபர்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக, இன்றையதினம் (29) மற்றும் கடந்த சில தினங்களாக, பல்வேறு ஊடகங்கள் வழியாக செய்திகள் வெளியாகியுள்ளதாகவும், அவ்வாறான செய்திகள் முற்றிலும் பொய்யானது எனவும் ருவன் குணசேகர தெரிவித்தார்.
அத்துடன், அவ்வாறான எந்தவொரு விடயங்களையும் சின்னையா சிவரூபன் உள்ளிட்ட 7 சந்தேகநபர்களாலும், பொலிஸாருக்கோ அல்லது அதிகாரிகளுக்கோ தெரிவிக்கப்படவில்லை எனவும் ருவன் குணசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.
கைதான சந்தேகநபர்கள் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment