கல்முனை விவகாரத்துக்கு 10 இற்குள் தீர்வு வேண்டும்! - தமிழ் மக்களுடன் பரஸ்பரத்தைக் காட்டுவதற்கு இதுவொரு நல்ல சந்தர்ப்பம் என்கிறார் ஹக்கீம் - News View

About Us

About Us

Breaking

Thursday, August 1, 2019

கல்முனை விவகாரத்துக்கு 10 இற்குள் தீர்வு வேண்டும்! - தமிழ் மக்களுடன் பரஸ்பரத்தைக் காட்டுவதற்கு இதுவொரு நல்ல சந்தர்ப்பம் என்கிறார் ஹக்கீம்

"கல்முனையில் நீண்டகாலமாக இழுபறி நிலையிலுள்ள நிர்வாக அலகுப் பிரச்சினைகளை எதிர்வரும் 10ஆம் திகதிக்குள் தீர்த்துக்கொள்வதற்கு முஸ்லிம் தரப்பும் தமிழ்த் தரப்பும் ஓர் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும். இந்தச் சந்தர்ப்பத்தை நாம் தவறவிட்டால், இதைப்போன்ற இன்னுமொரு சந்தர்ப்பம் நமக்குக் கிடைக்காது."

இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கல்முனை பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் நோக்கில் நேற்று (31) நாடாளுமன்றக் குழு அறையில் நடைபெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலின்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், "சாய்ந்தமருதுக்குத் தனியான உள்ளூராட்சி சபை வழங்குவதற்கு நாங்கள் உத்தரவாதம் வழங்கியுள்ள நிலையில், கல்முனை எல்லைப் பிரச்சினையால் தொடர்ந்து இழுபறி நடந்துகொண்டு வருகின்றது. இந்த இழுபறி நிலையை இன்னும் நீடிப்பதற்கு அனுமதிக்க முடியாது. இருதரப்பும் சேதாரமில்லாத விட்டுக்கொடுப்புகளை செய்து இன்னும் ஓரிரு நாட்களுக்குள் இதற்கு தீர்வு காணவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

சாய்ந்தமருது விடயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மீது இனியும் பழியைச் சுமக்க முடியாது. இதனை இன்னும் இழுத்தடித்துக்கொண்டிருக்க முடியாது. அதேநேரம் கல்முனைக்கும் அநீதி இழைக்கப்படாமல் தீர்வுகள் எட்டப்பட வேண்டும். இவையிரண்டையும் ஒரே நேரத்தில் செய்ய வேண்டுமென்றால் தமிழ்த் தரப்பும் முஸ்லிம் தரப்பும் ஓர் இணக்கப்பாட்டுக்கு வந்தே ஆகவேண்டும். தமிழ் மக்களுடன் பரஸ்பரத்தைக் காட்டுவதற்கு இதுவொரு நல்ல சந்தர்ப்பம்.

இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதில் அமைச்சர் வஜிர அபேவர்தன மும்முரமாக செயற்பட்டுக் கொண்டிருக்கிறார். கல்முனை எல்லைப் பிரச்சினை முடிவுக்கு வந்தால், மறுநாளே சபைகளை பிரகடனப்படுத்துவதாக அவர் கூறியிருக்கின்றார். தேர்தலுக்கு முன்னர் இதை சாதித்துக் கொள்வதில்தான் வெற்றி இருக்கின்றது. அடுத்த கட்டமாக கல்முனை மற்றும் மருதமுனை பிரதிநிதிகளுடன் பேசுவதற்கு தீர்மானித்துள்ளோம்" - என்றார்.

இந்தக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ், அலிஸாஹிர் மௌலானா, ஏ.எல்.எம். நசீர், மு.காவின் தவிசாளர் அப்துல் மஜீத், மு,காவின் பொதுச்செயலாளர் நிஸாம் காரியப்பர், கல்முனை மேயர் ரகீப், மாநகர சபை உறுப்பினர்கள், சாய்ந்தமருது சுயேற்சைக் குழு உறுப்பினர்கள், சாய்ந்தமருது பள்ளிவாசல் தலைவர் வை.எம். ஹனீபா, கட்சியின் உள்ளூர் பிரதிநிதிகள் மற்றும் கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை, நற்பிட்டிமுனை ஊர்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

Charles Ariyakumar Jaseeharan

No comments:

Post a Comment