வடக்கிலும் தெற்கிலும் உள்ள இளம் சமூகத்தினர் விசேடமாக பாடசாலை மாணவர்கள் இரண்டாம் மொழியைக் கற்பதில் பெரும் ஆர்வமாக உள்ளனர் என்று தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், கமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
70 வருடங்களுக்கு மேற்பட்ட காலமாக நாட்டில் நிலைபெற்றுவரும் மொழிப்பிரச்சினைக்கு ஒரே நாளில் தீர்வு காணமுடியாது. அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு என்ற ரீதியில் எமக்கு வழங்கப்பட்ட பொறுப்பை கடந்த 4 வருட காலத்திற்குள் உரிய முறையில் நிறைவேற்றியுள்ளோம் இதன் பெறுபேற்றை நாட்டு மக்கள் இன்று காணக்கூடியதாக உள்ளது என்றும் தெரிவித்தார்.
பாடசாலைகளில் விசேடமாக சிங்கள மொழி பாடசாலைகளில் தமிழ் மொழியை கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் இல்லை. இதே போன்று தமிழ் மொழிப் பாடசாலைகளில் 2ஆம் மொழியை கற்பிப்பதற்கு ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது.
இந்த குறைபாடுகளை காரணம் காட்டி சமூகத்துக்கிடையிலான நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் எமது பொறுப்பை நாம் புறந்தள்ளவில்லை என்று தெரிவித்த அமைச்சர் தெரிந்தால் கற்பியுங்கள் - தெரியாவிட்டால் கற்றுக்கொள்ளுங்கள்' என்ற நிகழ்ச்சியை இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் 9 சேவைகளின் ஊடாக தமிழ் மற்றும் சிங்கள மொழியை கற்றுக்கொள்வதற்கான நிகழ்ச்சித்திட்டங்களை நாம் முன்னெடுத்துள்ளோம்.
இதே போன்று தொலைக்காட்சி சேவையின் ஊடாகவும் நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. எமது இந்த முயற்சி பெரும் வெற்றியளித்துள்ளது. அதாவது 2019 ஆம் ஆண்டு கல்வி பொது தராதர பரீட்சையில் சிங்களம் மற்றும் தமிழ் மொழி பாடத்தில் சிறந்த பெறுபேறுகளை மாணவர்கள், அரச ஊழியர்கள் உள்ளிட்டோர் பெற்றுள்ளனர்.
இந்த பெறுபேறுகளின் அடிப்படையில் ஏ தர சித்திகளை பெற்ற மாணவர்களை நாம் கௌரவிக்க உள்ளோம். இது தொடர்பான நிகழ்வு இம்மாதம் 18 ஆம் திகதி கொழும்பு அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் சுமார் 4000 மாணவர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர். இந்த மாணவர்களுக்கு பாடங்களை கற்பித்த ஆசிரியர்களும் கௌரவிக்கப்படவுள்ளனர். கம்பெரலிய மடோல்தூவ என்ற சிங்கள நூலின் தமிழ் மொழி பெயர்ப்பும், தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ள இராமாயணத்தின் சிங்கள மொழி பெயர்ப்பு புத்தகங்களும் இதன் போது வழங்கப்படவுள்ளன.
வானொலி நிகழ்ச்சி திட்டத்தை நெறிப்படுத்தி நடாத்திய இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் 6 கலைஞர்கள் பாராட்டி கொரவிக்கப்படவுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment