மறைமுக வரிகளைக் குறைத்து நேரடி வரிகளை அதிகரிப்பதற்கு தொடர்ந்தும் நடவடிக்கை எடுத்தால் எதிவரும் வருடங்களில் 15 வீத வரியை மேலும் இரண்டு வீதத்தால் குறைக்க முடியும் என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
அரசாங்கம் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துள்ள போதும் மக்களுக்கு சுமையை ஏற்படுத்தாத வகையில் வருமான வழியையும் வலுப்படுத்த வேண்டியுள்ளது. அரசாங்கத்தின் வரி வருமானத்தில் 80 வீதத்துக்கும் அதிகமான பங்கு மறைமுக வரிகளிலிருந்தும், 20 வீதத்தைவிடக் குறைந்தளவே நேரடி வரியாகவும் கிடைக்கிறது.
இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும். இதனை மாற்றுவதற்கு தொடர்ந்தும் நடவடிக்கை எடுத்தால் எதிர்வரும் வருடங்களில் வரி வீதத்தை 15 வீதத்திலிருந்து மேலும் இரண்டு வீதங்களால் குறைக்க முடியும் என்றார்.
தீவிர பொறுப்பு முகாமைத்துவச் சட்டத்தின் கீழ் தீர்மானங்கள் உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான கட்டளைகள் மீதான விவாதத்தில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மங்கள சமரவீர இதனைக் குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர், அரசாங்கம் குறுகிய காலத்தில் சுகாதாரத்துறை, கல்வித்துறை, உட்கட்டமைப்பு அபிவிருத்தித்துறை என பல துறைகளில் கணிசமான முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்தும் மக்களுக்கு தேவையான அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு மேலும் சுமைகளை அதிகரிக்காத வகையில் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அரசாங்கத்தின் வரி வருமானத்தை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment