எச்.எம்.எம்.பர்ஸான்
உலகிற்கு அதிகமாக கலைகளையும் நாகரிகங்களையும் காட்டியவர்கள் இஸ்லாமியர்கள்தான் என்று மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.எம்.எஸ். உமர் மௌலானா தெரிவித்தார்.
வாழைச்சேனை வை.அஹமட் வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் பேசுகையில், நாங்கள் நாகரிகங்கள் தெரியாதவர்களென்றும், ஏனையவர்களுடைய நாகரிகங்கள் போன்று நாங்கள் ஆடை அணிந்தால், அதேபோன்று பாசாங்கு செய்தால், அதே போன்று நிகழ்ச்சிகளை செய்தால் மாத்திரம்தான் எங்களுடைய சமுதாயத்தில் எடுபடும் என்று நாம் எண்ணிக் கொண்டிருக்கின்றோம். அது தவறான எண்ணமாகும்.
பரதநாட்டியம் ஆடுகின்ற ஒரு இந்துவின் கலாசாரத்தையும், பௌத்த நாகரியத்தையும், கிறிஸ்தவ நாகரிகங்களையும் நாங்கள் குறை சொல்ல முடியாது ஏனென்றால் அவர்களுடைய கலாசாரத்துக்குரிய காரியங்களை அவர்கள் சரியாக செய்வார்கள். அதிலே மிகவும் கண்டிப்பாக இருப்பார்கள்.
அவர்களுடைய ஆடைகளாக இருக்கலாம் அவர்களுடைய பாடலாக இருக்கலாம் ஒவ்வொரு விடயத்திலும் அவர்கள் மிகவும் கண்டிப்பாகவிருந்து அவர்களுடைய பிள்ளைகளை அவர்கள் தேர்ச்சிபெற வைப்பார்கள். ஆனால் இஸ்லாமியர்களாகிய நாங்கள் ஏதாவது பாட்டுக் கேட்டுத்தான் ஆக வேண்டும் என்ற நிலைமையில் தள்ளப்பட்டிருக்கின்றோம் எனும் விடயம் கவலை தருகின்றது.
பாடசாலைகளில் இடம்பெறுகின்ற பரிசளிப்பு விழாக்களையும், கௌரவிப்பு நிகழ்வுகளையும் காணுகின்ற புதிய மாணவர்கள் எதிர்காலத்தில் தாங்களும் இவ்வாறு பரிசில்களை பெறவேண்டும் என்று முயற்சிப்பார்கள் என்ற காரணத்தினால்தான் இவ்வாறான நிகழ்வுகளை நாங்கள் வரவேற்கின்றோம்.
பாடசாலைகளில் ஒரு நிகழ்வு நடைபெறுகின்ற போது பெற்றோர்களும் ஏனையோர்களும் சேர்ந்து அந்தப் பாடசாலையை அழகுபடுத்துகின்ற, அந்த நிகழ்ச்சிகளை அழகுபடுத்துகின்ற நிகழ்வுகள் அனேகமாக பெற்றோர்களுடைய கையிலேயே தங்கியுள்ளது.
சில பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளில் இவ்வாறான நிகழ்வுகள் நடைபெறுகின்ற போது மாணவர்களின் பெற்றோர்களும் அவர்களுடைய உறவினர்களும் மாணவர்களின் நிகழ்ச்சிகளை அழகாக நடாத்தி பாடசாலைக்கு பெருமை சேர்த்துக் கொடுப்பதில் அந்தப் பெற்றோர்களும் உறவினர்களும் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள் என்றார்.
No comments:
Post a Comment