சிறிலங்கா அமரபுர நிக்காவினால் சபாநாயகருக்கு வழங்கப்பட்ட கௌரவப் பட்டத்துக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன். வீதி அபிவிருத்திப் பணிகளை சம்பந்தப்பட்ட அமைச்சரும் அவரின் அமைச்சின் கீழ் உள்ள அதிகாரிகளும் சிறப்பாக செயற்படுத்துகின்றனர் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
தீவிர பொறுப்பு முகாமைத்துவச் சட்டத்தின் கீழ் தீர்மானங்கள் உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான கட்டளைகள் மீதான விவாதத்தில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றும்போதே முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான அமீர் அலி இதனைக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து தெரிவிக்கையில், ஐ ரோட் திட்டம் பற்றி பலர் பேசினார்கள். நீண்ட நாட்களாக இத் திட்டத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.
இதில் அமைச்சர் தனது கெட்டித்தனத்தைக் காட்ட வேண்டும். அதிவேக நெடுஞ்சாலை எல்லாப் பிரதேசம் பற்றிப் பேசப்படுகின்ற போதும் கிழக்குப் பற்றி எவரும் பேசுவதாகத் தெரியவில்லை. எதிர்வரும் காலங்களில் அதிவேக நெடுஞ்சாலை கிழக்கையும் ஊடறுத்துச் செல்லும் வகையில் அமைய வேண்டும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் 2000 இற்கும் அதிகமான முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 34 பேர் எந்தக் குற்றச்சாட்டுக்களும் இல்லாதவர்கள் என பாதுகாப்புத் தரப்பினர் அறிவித்துள்ளனர். 14 பேர் தடுப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதுபோன்று டொக்டர் ஷாபிக்கு எதிராக எந்தவிதமான குற்றச்சாட்டும் இல்லையென கூறப்பட்டுள்ள போதும் அவரை விடுவிக்கவில்லை. அவர் அவசரமாக விடுதலை செய்யப்பட வேண்டும். கலவரங்களில் பள்ளிவாசல்கள் மற்றும் கடைகள் உடைக்கப்பட்டுள்ளன. இவற்றை உடைத்தவர்கள் யாரோ அவர்களின் ஊடாகவே அவை கட்டப்படவேண்டும்.
இவற்றுக்கான நஷ்டஈடுகளை உடனடியாக வழங்கி மீளக்கட்டுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜனாதிபதியைச் சந்தித்து முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்களை எடுத்துக் கூறியிருந்தோம்.
அவர் மீது எமக்கு நம்பிக்கை உள்ளது. பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கின்றோம்.
No comments:
Post a Comment