இனப் பிரச்சினையை தீர்த்து வைக்கக் கூடிய ஆளுமை சிங்களத் தலைவர்களிடத்தில் இல்லை - சிறிநேசன் எம்.பி - News View

About Us

About Us

Breaking

Saturday, July 27, 2019

இனப் பிரச்சினையை தீர்த்து வைக்கக் கூடிய ஆளுமை சிங்களத் தலைவர்களிடத்தில் இல்லை - சிறிநேசன் எம்.பி

இலங்கையின் இனப் பிரச்சினையை தீர்த்து வைக்கக் கூடிய ஆளுமை சிங்களத் தலைவர்களிடத்தில் இல்லை என்பதை மக்கள் உணர்ந்துள்ளார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான சந்தர்ப்பம் இருந்தும், சுயநல கட்சி இலாபத்தில் செயற்படுகின்ற சிங்கள அரசியல் கட்சிகள் இந்த அருமையான சந்தர்ப்பத்தை தவறவிட்டுள்ளார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு, மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பகுதியில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், “அண்மையில் அரசியல் யாப்பு தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஐயா மூலம் நாடாளுமன்றத்திலே ஒத்திவைப்பு பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டது.

அரசியலமைப்பு விடையத்தில் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற கட்சிகள் எவ்வாறான போக்கைக் கொண்டிருக்கின்றார்கள் என்ற மதிப்பீட்டைப் பெறுவதற்காகவே இந்த ஒத்திவைப்பு பிரேரணை கொண்டுவரப்பட்டது.

கடந்த காலத்தில் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு விட்டுக் கொடுப்புடன் அரசியல் தீர்வைக் காண்பதற்கு செயற்பட்டு வருகின்றது.

இந்த எமது முயற்சியை தேசிய அரசாங்கம் என்ற ரீதியில் ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றோம்.

ஆனால் சுயநல கட்சி இலாபத்தில் செயற்படுகின்ற சிங்கள அரசியல் கட்சிகள் இந்த அருமையான சந்தர்ப்பத்தை தவற விட்டுள்ளார்கள். இச்சந்தர்ப்பமானது சிங்கள தலைமைகள் மீது தமிழ் மக்கள் நம்பிக்கை வைக்க முடியாது என்பதைக் காட்டி நிற்கின்றது.

உள்நாட்டு ரீதியாக இலங்கையின் இனப் பிரச்சினையைத் தீர்த்து வைக்கக் கூடிய சக்தி, தலைமைத்துவம், ஆளுமை போன்றன சிங்களத் தலைவர்களிடத்தில் இல்லை என்பதை தமிழ் மக்களால் உணரப்பட்டுள்ளது. எனவே நாம் சர்வதேசத்தின் மத்தியில் எடுத்துரைத்துள்ளோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment