ஆட்புல ஒருமைப்பாடு, இறைமைக்கு பாதகமாக செயற்படமாட்டோம் - சோபா: இன்னும் கைச்சாத்திடவில்லை - பிரதமர் ரணில் விக்கிரமசிங்க - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 10, 2019

ஆட்புல ஒருமைப்பாடு, இறைமைக்கு பாதகமாக செயற்படமாட்டோம் - சோபா: இன்னும் கைச்சாத்திடவில்லை - பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

'சோபா' ஒப்பந்தம் இதுவரை கைச்சாத்திடப்படவில்லை. இதிலுள்ள சில விடயங்கள் தொடர்பில் பிரச்சினையுள்ளது. நாட்டின் ஆட்புல ஒருமைப்பாடு, இறைமைகளைப் பாதிக்கும் எந்த நடவடிக்கைகளையும் எடுக்க மாட்டோமெனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்படவுள்ள ஒப்பந்தங்கள் தொடர்பில், ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக்க மற்றும் ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

பிரதமர் மேலும் கூறுகையில், அமெரிக்காவுடனான 'சோபா' ஒப்பந்தம் 1996 இல் அமெரிக்க தூதுவர் அலுவலகத்துடன் செய்து கொள்ளப்பட்டது. இது பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தமன்றி சமாதானம் தொடர்பான விடயங்கள் அடங்கிய ஒப்பந்தமாகும். 

அமெரிக்க இராணுவம் வெளிநாடுகளில் பணியாற்றுவது தொடர்பான உடன்பாடுகள் இதில் காணப்படுகிறது. மஹிந்த ராஜபக்‌ஷ அரசும் மற்றொரு ஒப்பந்தத்தை மேற்கொண்டது. 2017 இல் இது மீளப் புதுப்பிக்கப்பட்டது. 

ஆனால் "சோபா" ஒப்பந்தம் தொடர்பில் அச்சத்தை உருவாக்க எதிர்க்கட்சி முயல்கிறது. புதிய ஒப்பந்தம் எதுவும் செய்யப்படவில்லை. இந்த ஒப்பந்தம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சுக்கே பொறுப்புள்ளது. ஒப்பந்தம் தொடர்பில் அமைச்சரவைக்கு எந்த யோசனையும் முன்வைக்கப்படவில்லை. 

பாதுகாப்பு அமைச்சினூடாக அமைச்சரவை அலுவலகத்திற்கு எந்த ஆவணமும் முன்வைக்கப்படவில்லை. இந்நிலையில் புதிதாக எந்த ஒப்பந்தமும் இதுவரை நிறைவேற்றப்படவுமில்லை. புதிய யோசனையிலுள்ள நிபந்தனைகளை ஏற்க முடியாது. பிரச்சினைக்குரிய யோசனைகள் குறித்து அமெரிக்காவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க தூதரகமும் அமைச்சும் இதுபற்றி ஆராய்கின்றன.

சோபா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாக ஊடகங்கள் கூறின. அவ்வாறு இருந்தால் அதனை முன்வைக்குமாறு கோருகிறேன். இது தொடர்பில் பொலிஸூடாக விசாரிக்க வேண்டும். தென் ஆபிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளும் இது போன்ற ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.

‘எக்டா’ ஒப்பந்தத்தில் பல திருத்தங்கள் செய்ய வேண்டும். நாமும் சில திருத்தங்களை முன்வைத்துள்ளோம்.

எமது நாட்டில் இராணுவ தளபதி உத்தரவுகளை வழங்கினாலும் அமெரிக்காவில் வலயத்திற்கு பொறுப்பானவர்களே உத்தரவுகளை வழங்குகின்றனர். அமெரிக்கா ஜனாதிபதி கடற்படை கப்பல்களின் தொகையை அதிகரித்து வருகிறார்.

‘எக்டா’ ஒப்பந்தம் 2007 இல் செய்யப்பட்டது. கோட்டாபய கைச்சாத்திட்ட ஒப்பந்தம் 7 பக்கங்களை கொண்டது. நாம் 5 பக்க ஒப்பந்தமே செய்துள்ளோம். 7 பக்க ஒப்பந்தத்தை விட 5 பக்க ஒப்பந்தம் தவறானதா? நாம் நாட்டை காட்டிக் கொடுப்பதாக குற்றம் சாட்டுகின்றனர். அமெரிக்க பிரஜை கைச்சாத்திட்ட ஒப்பந்தம் நல்லதா?

இந்து - லங்கா ஒப்பந்தம் செய்யப்பட்டாலும் திருகோணமலை துறைமுகம் இந்தியாவுக்கு வழங்கப்படவில்லை. சீனாவுக்கோ, பிரிட்டனுக்கோ அமெரிக்காவுக்கோ வேறு நாட்டிற்கோ திருகோணமலை துறைமுகம் வழங்கப்படமாட்டாது.

சுனாமியின் பின்னர் அமெரிக்கா கட்டிடங்கள் கட்டியதால் கடல்வழியாக இலங்கையை பிடிக்கலாம் எனவும் சிலர் கூறுகின்றனர். அமெரிக்காவின் பிரதான முகாம்கள் பல நாடுகளில் உள்ளன. 

அமெரிக்காவின் ஒரு கப்பலில் 90 தாக்குதல் விமானங்கள் தரித்து நிற்கும். அவ்வாறான கப்பல் இங்கு வந்தால் எங்கு அவற்றை நிறுத்தி வைப்பது. அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு முறை வித்தியாசமானது. போர்த்துக்கேயர் போன்று கடல் மார்க்கமாக ஆக்கிரமிப்பு நடக்காது.

மிலேனியம் செலேன்ஞ் ஒப்பந்தத்தினூடாக அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு உதவிகள் கிடைக்க இருக்கிறது. போக்குவரத்து வசதி, காணி அபிவிருத்தி திட்டம், மதிப்பீடு போன்ற பல விடயங்களுக்காகவும் இந்த ஒப்பந்தத்தினூடாக அமெரிக்க உதவி பெறப்படவுள்ளது.

அமைச்சரவை அனுமதி கிடைத்த பின்னர் ஒப்பந்தங்கள் சபையில் சமர்ப்பிக்கப்படும். சோபா ஒப்பந்தத்தில் இருக்கும் நீதிமன்ற அதிகாரம் போன்ற விடயங்கள் தொடர்பில் பிரச்சினை இருக்கிறது. அவற்றுக்கு உடன்பட முடியாது. எமக்கு சாதகமாகவே ஒப்பந்தத்தை கைச்சாத்திட இருக்கிறோம் என்றார்.

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்

No comments:

Post a Comment