குருநாகல் வைத்தியர் மொஹமட் ஷாபி விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்றில் தெரிவுக்குழுவொன்றை ஸ்தாபித்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தன தேரர் தெரிவித்தார்.
மேலும். இந்த விடயத்தில் பொலிஸார் மீது நம்பிக்கை இல்லை என்றும் அவர் கூறினார். கொழும்பில் நேற்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “குருநாகல் வைத்தியசாலையில் பணிப்பாளர், 900 தாய்மார்களிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு நேர்ந்த பல்வேறு அநீதிகளை தெரிவித்திருந்தார்.
குறித்த பெண் அல்லது அவரது கணவரின் ஒப்புதல் இன்றி கருக்கலைப்பு செய்வதானது சிறைச்சாலைக்கு செல்லுமளவுக்கு பாரிய குற்றமாகவே கருதப்படுகிறது. இவ்வாறான பல கருக்கலைப்புக்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த நிலையில், இது தொடர்பாக சாட்சியமளித்த குருநாகல் வைத்தியசாலையின் வைத்தியர்கள் பல்வேறு நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார்கள்.
வைத்தியர் மொஹமட் ஷாபியூடாக, சிசேரியன் சத்திர சிகிச்சை செய்து கொண்ட முஸ்லிம் பெண்களுக்கு குழந்தை இருக்கும்போது, சிங்களப் பெண்களுக்கு மட்டும் குழந்தை எவ்வாறு இல்லாது போனது என்பதுதான் எமது கேள்வியாக இருக்கிறது.
இதுதொடர்பாக தீர்க்கமான விசாரணைகள் மேற்கொள்ள வேண்டியது அவசியமாக இருக்கிறது.
வைத்தியர் ஷாபியின் சொத்துக்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.
இதனை அவர்கள் மேற்கொள்ளத் தவறுவார்களாயின், குருநாகல் பொதுமக்களுடன் இணைந்து நாம் அனைத்து விடயங்களையும் வெளிக்கொண்டுவருவோம் என்பதை இவ்வேளையில் கூறிக்கொள்கிறேன்.
அவரின் சொத்துக்கள், வருமானம், வங்கிக் கணக்கு குறித்த அனைத்து விடயங்களும் எம்மிடம் இருக்கின்றன. பொலிஸாரும் நீதிமன்றமும் பொதுமக்களுக்கு சட்டத்தை கையில் எடுக்க இடமளிக்கக்கூடாது.
எனவே, இது தொடர்பாக உரிய நடவடிக்கையை எடுக்க அதிகாரிகள் தவறுவார்களாயின், நாம் அனைத்து விடயங்களையும் அறிக்கையாகத் தயார் செய்து வெளியிடுவோம். இதனை எவராலும் தடுக்க முடியாது.
எனவே, இது தொடர்பாக நாடாளுமன்றில் விசேட தெரிவுக்குழுவொன்றை ஸ்தாபிக்க வேண்டும் என்றும் நாம் கேட்டுக்கொள்கிறோம்” என மேலும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment