தமிழர்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கின்றது, அதை மீண்டும், மீண்டும் சோதனைக்குட்படுத்தி நாட்டில் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்த வேண்டாம் - News View

About Us

About Us

Breaking

Saturday, July 27, 2019

தமிழர்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கின்றது, அதை மீண்டும், மீண்டும் சோதனைக்குட்படுத்தி நாட்டில் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்த வேண்டாம்

தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்காக அனைத்து விட்டுக்கொடுப்புகளையும் தமிழ் சமூகம் செய்துள்ளது. இது விடயத்தில் இனியும் விட்டுக்கொடுக்க எதுவும் இல்லை. எனவே, இழுத்தடிப்பு செய்யாமல் அரசியல் தீர்வை காணும் வகையில் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணி துரிதப்படுத்தப்பட வேண்டும். 

இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், இந்து சமய விவகார அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார். 

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு அதன் ஊடாக விரைவில் அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனால் சபையில் நேற்றுமுன்தினம் (25) சமர்ப்பிக்கப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் மேற்கண்டவாறு கூறினார். 

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, “தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படும் என்ற உறுதி மொழியின் பிரகாரம் பூர்வாங்க செயற்பாடுகள் வெற்றிகரமாக ஆரம்பமாகின. காலப்போக்கில் அந்த பயணம் மந்தகதியை அடைந்து தற்போது முற்றாக முடங்கும் கட்டத்தில் உள்ளது. எனவே, முன்னுரிமை வழங்கப்பட்டு தீர்க்கப்பட வேண்டிய இந்தப் பிரச்சினை ஓரங்கட்டிவிட்டு பிரதான அரசியல் கட்சிகள் ஏனைய பிரச்சினைகளின் பின்னால் ஓடித்திரிகின்றன. 

புதிய அரசியலமைப்பை உருவாக்கும் செயற்றிட்டத்துக்காக பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மக்களிடம் கருத்தறிவது உட்பட இதர பணிகளுக்காக குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் அந்தப் பணிகள் ஸ்தம்பிதமடைந்திருப்பதை அரசாங்கத்துக்கு ஏற்பட்ட தோல்வியாகவோ அல்லது எதிரணிக்கு கிடைத்த வெற்றியாகவோ கருத முடியாது. நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பெரும் பின்னடையாவே கருத வேண்டும். 

தமிழீழ விடுதலைப் புலிகள் விட்டுக் கொடுப்புடன் செயற்பட்டிருந்தால் பேரிழப்பு ஏற்பட்டிருக்காது என கடந்த காலங்களில் பல தரப்புகளும் விமர்சனங்களை முன்வைத்தன. இன்று தமிழர் தரப்புகள் விட்டுக் கொடுப்புடன் செயற்படுகின்றன. ஆனால் நடப்பது என்ன? 

அரசியல் தீர்வு திட்ட விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகவும் பொறுமையாகவும், விட்டுக் கொடுப்புடனும் செயற்பட்டு வருகின்றது. குறிப்பாக சமஷ்டி, வடக்கு, கிழக்கு இணைப்பு ஆகியவற்றுக்கு இடமில்லை என விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பும் ஏற்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல பௌத்த மதத்துக்கான முன்னுரிமைக்கும் பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது. 

இவ்வாறு தமிழர் தரப்பால் பல விட்டுக் கொடுப்புகள் செய்யப்பட்டுள்ளன. இனியும் விட்டுக் கொடுப்பு செய்வதாக இருந்தால் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் திட்டத்தைதான் கைவிட வேண்டும். 

அதேபோல் சம்பந்தன் ஐயாவை வெறுங்கையுடன் வடக்குக்கு அனுப்ப வேண்டாம். அது நாட்டுக்கு நல்லதாக அமையாது. எனவே, வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுமாறு எமது தலைவர் மனோ கணேசனும் இந்த சபையில் சுட்டிக்காட்டிருந்தார். எனவே, விட்டுக் கொடுப்பின் பெறுமதியை இனியாவது உணருமாறு கேட்டுக் கொள்கின்றேன். 

தீர்வு திட்ட விடயத்தில் தலைவர் மனோ கணேசன் தமிழ் முற்போக்கு கூட்டணியும் பொறுப்புடன் செயற்பட்டு வந்தது. பௌத்த மதத்துக்கான முன்னுரிமை நீக்கப்படவுள்ளது என சிங்கள, பௌத்த மக்கள் மத்தியில் போலி பரப்புரைகள் முன்னெடுக்கப்பட்டன. இவற்றை நாம் முறியடித்தோம். மக்களுக்கு உண்மை நிலைமையை தெளிவுபடுத்தினோம். 

இந்த நாட்டிலே நிலையான சமாதானம் மலர வேண்டுமெனில் தேசிய இனப்பிரச்சினைக்கு கட்டாயம் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். அதற்காக புதிய அரசியமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் எவர் ஜனாதிபதியானாலும் முன்நோக்கி பயணிக்க முடியாத நிலையே ஏற்படும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 

தமிழர்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கின்றது. அதை மீண்டும், மீண்டும் சோதனைக்குட்படுத்தி நாட்டில் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்த வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்கின்றேன்.” என்றார்.

No comments:

Post a Comment