விக்னேஸ்வரன் தலைமையில் புதிய கூட்டணியை வல்லரசுகள் உருவாக்குகின்றன, நாம் வல்லரசுகள் சார்பாக செயற்பட மாட்டோம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 31, 2019

விக்னேஸ்வரன் தலைமையில் புதிய கூட்டணியை வல்லரசுகள் உருவாக்குகின்றன, நாம் வல்லரசுகள் சார்பாக செயற்பட மாட்டோம்

தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்காலத்தில் பாரிய தோல்வியைச் சந்திக்கும் என்பதால், தமது எண்ணப்படி செயற்படும் வகையில் விக்னேஸ்வரன் தலைமையில் புதிய கூட்டணியை வல்லரசுகள் உருவாக்குகின்றன. இந்நிலையில், நாம் வல்லரசுகள் சார்பாக செயற்பட மாட்டோம் என்பதாலேயே எம்மை அக்கூட்டில் இணைய விடாது தடுக்கின்றன எனத் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்தது. 

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகவியலாளர்கள் சந்திப்பு நேற்று முன்தினம் பிற்பகல் யாழ்.கொக்குவிலில் இடம்பெற்றது. இதன்போது அக் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் கூறுகையில், இந்தியா போன்ற சர்வதேச அல்லது வல்லரசுகளின் நலன்களுக்காக அவர்களது எடுபிடிகளாக கூட்டமைப்பினர் செயற்பட்டு வந்தனர். ஆனால், கூட்டமைப்பின் இச்செயற்பாடுகளை மக்கள் உணர்ந்துள்ளதால், கூட்டமைப்பினர் எதிர்வரும் தேர்தல்களில் நிச்சயம் பாரிய தோல்வியை எதிர்நோக்கப்போகின்றனர் என்ற அடிப்படையில் புதிய அணியொன்றை உருவாக்கும் செயற்பாடுகளில் இந்த வல்லரசுகள் இருக்கின்றன. 

ஆனால், அந்த வல்லரசுகளின் நலன்களுக்காக மட்டும் செயற்பட நாம் ஒரு போதும் தயாரில்லை என்பதாலும் எமது மக்களின் நலன்களை முன்னிறுத்தி பேரம் பேசக்கூடிய தரப்பாக நாங்கள் இருப்பதால், அவர்கள் தங்களுக்குச் சார்பாகச் செயற்படக் கூடியவர்களை இணைத்து ஒரு புதிய அணியை உருவாக்கப் போகின்றனர்.

அந்த அணியில் இந்தியாவின் அல்லது இலங்கை அரசுகளின் விசுவாசிகளாக இருக்கின்ற ஈ.பி.ஆர்.எல்.எப். போன்ற தரப்புக்கள் உள்வாங்கப்பட்டால் நாங்கள் அந்த அணியில் இணைந்து கொள்ளப் போவதில்லை என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றோம்.

ஏனெனில், கூட்டமைப்பினர் செய்து வருகின்ற அதே செயற்பாடுகளையே இவர்களும் செய்யப் போகின்றனர். ஆகவே, அதில் நாமும் இணைந்து கொள்வதால் மக்களுக்கு எந்தவித நன்மைகளும் ஏற்படப் போவதில்லை என்றார்.

பருத்தித்துறை நிருபர்

No comments:

Post a Comment