கன்னியாவில் இந்துமத குருக்கள் மீது வெந்நீரை ஊற்றிய வன்செயலை முஸ்லிம் உலமா கட்சி வன்மையாக கண்டிப்பதாக அக்கட்சியின் தலைவர் அஷ்ஷெய்க். முபாரக் அப்துல் மஜீட் தெரிவித்துள்ளார்.
இது பற்றி முபாறக் அப்துல் மஜீத் மேலும் கூறியதாவது கன்னியா என்பது தமிழ் பேசும் மக்களின் பூமியாகும். இங்கு காலாகாலமாக தமிழர்களும் முஸ்லிம்களுமே வாழ்ந்தார்கள்.
கன்னியா வெந்நீரூற்று கிணற்றுக்கருகில் ஒரு சிறிய பள்ளிவாயலும் 40 அடி இரு முஸ்லிம் சமாதியும் இருக்கின்றன. இவை பல்லாயிரம் வருடத்துக்கு முந்தியவை என சொல்லப்படுகிறது.
இந்த இரு சமாதிகளும் இராவணன் மற்றும் அவனின் தாயுடையது என இந்தியாவைச் சேர்ந்த சீக்கிய ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார். இராவணம் இந்துவா முஸ்லிமா என்பதில் கருத்து வேறு பாடு இருப்பினும் அச்சமாதிகளை பாதுகாத்து வந்தவர்கள் முஸ்லிம்களாகும்.
90ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் முஸ்லிம்கள் மீது தாக்கியதால் கன்னியா முஸ்லிம்கள் இடம் பெயர்ந்தனர். பள்ளியும் சமாதியும் சிதைக்கப்பட்டன. இப்போது அந்தப்பள்ளிவாயல் உள்ளதா என்பது தெரியாத நிலையில் சிதைவுற்றுள்ளது.
அதன் பின் யுத்த முடிவில் கன்னியாவில் சிங்கள ஆக்கிரமிப்பு ஏற்பட்டது. யுத்தம் முடிந்தும் முஸ்லிம்கள் குடியேற தமிழ் தரப்புக்களும் இடம் கொடுக்கவில்லை என்பதை சிங்கள இனவாதம் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டது.
இப்போது கன்னியாவை பௌத்தமயப்படுத்தி ஆக்கிரமிக்க தமிழ் முஸ்லிம்கள் 99 வீதம் வாக்களித்து வந்த ஐ.தே.கட்சி அரசினால் முயற்சி மேற்கொள்ளப்படுவது கண்டிக்கத்தக்கதாகும்.
இதன் பின்னணியிலேயே கன்னியாவின் ஆக்கிரமிப்புக்கெதிராக ஜனநாயக வழியில் ஆர்ப்பாட்டம் செய்த தமிழ் மக்கள் மீது வெந்நீர் ஊற்றியமை மிக மோசமான இனவாத செயற்பாடாகும். இத்தகைய ஆக்கிரமிப்பை தமிழ் பேசும் சமூகங்கள் இணைந்து கண்டிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment