அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி சமர்ப்பித்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் இன்றும் நாளையும் இடம்பெறுகிறது. இரு நாள் விவாதத்தின் பின்னர் நாளை மாலை 6.30 இற்கு வாக்கெடுப்பு நடத்தப்படும்.
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கடந்த மே மாதம் 21ஆம் திகதி கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவினால் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக தாக்குதலுக்கு முன்னரே சர்வதேச உளவுப் பிரிவுகளினூடாக தகவல் கிடைத்திருந்தும் அதனைத் தடுக்க அரசாங்கம் தவறியமை, அதன்பின்னரான வன்முறைகளைத் தடுக்காமை உட்பட 6பிரதான விடயங்களின் கீழ் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.
இந்தப் பிரேரணை மீது இரு தினங்கள் விவாதம் நடத்த கடந்த மாதம் நடைபெற்ற கட்சித் தலைவர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இன்று காலை 11.30 முதல் மாலை 6.30 வரையும் நாளை காலை 11.30 முதல் மாலை 6.30 வரையும் விவாதம் நடைபெற்று வாக்கெடுப்பு நடத்தப்படும். பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதாக ஜே.வி.பி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணி என்பன அறிவித்துள்ளன.
அரசாங்கத்திற்கு எதிரான முடிவை எடுப்பதாக சுதந்திரக் கட்சி செயலாளர் தயாசிறி ஜெயசேகர அறிவித்துள்ளார். இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவுடன் நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிப்பதாக ஆளும் தரப்பு அறிவித்துள்ளது.
ஆளும் தரப்பில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி என்பன பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதே வேளை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என சில தமிழ் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. பரபரப்பான சூழ்நிலையில் இன்று அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் நடைபெற்றது.
ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்
No comments:
Post a Comment