இனப் பிரச்சினைக்கு 2 வருடத்திற்குள் தீர்வு என்றும், பெரும்பான்மை பலம் தமக்கு இல்லை என்றும் பிரதமர் கூறுவது வேடிக்கையானது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமா டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
மேலும், பிரதமரின் இந்தக் கருத்துக்களில் ஒருவித உண்மையும் இல்லை என்பதுடன் வெறுமனே தேர்தலுக்கான வாக்குகளை தாம் பெற்றுக் கொள்வதே நோக்கம் என்று பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ். ஸ்ரான்லி வீதியிலுள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து தெரிவித்து தெரிவிக்கையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இந்த விஜயத்தின் போது அவர் கலந்துகொண்ட நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போது இனப் பிரச்சினைக்கான தீர்வை 2 அல்லது 3 வருடங்களில் பெற்றுக் கொடுக்கப்போவதாக தெரிவித்திருக்கின்றார். அத்துடன் இதனைத் தாம் செய்வதற்குப் பெரும்பான்மை இல்லை என்றும் கூறியிருக்கின்றார்.
உண்மையில் இனப் பிரச்சினைக்கான தீர்வைக் கொடுக்க வேண்டுமாக இருந்திருந்தால் இந்த ஆட்சி வந்து 6 மாதம் அல்லது ஒரு வருடத்திற்குள் கொடுத்திருக்க வேண்டும். இதைத்தான் நான் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்தேன். ஏனெனில் ஆறின கஞ்சி பழங்கஞ்சி என்பது போல் எல்லாம் மாறி விடும் என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தேன். அதுதான் இன்றைக்கு நடந்தும் இருக்கின்றது.
ஆனாலும் பிரதமர் தீர்வைக் கொடுப்பதாக கூறியிருக்கின்றார். ஆனால் அவர் கூறியதில் உண்மைத் தன்மை இல்லை. ஏனெனில் தேர்தல்கள் வரவிருப்பதால் தமக்கு ஆதரவை வழங்கும் கூட்டமைப்பினரின் வாக்கு வங்கி அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவே இந்தக் கருத்தை முன் வைத்திருக்கின்றார். அதே நேரத்தில் இதனைச் செய்வதற்கு தமக்குப் பெரும்பான்மை இல்லை என்றும் பிரதமர் கூறியிருக்கின்றார்.
ஆனால் பெரும்பான்மை இருந்த காரணத்தினால் தான் இந்த அரசாங்கமும் காப்பாற்றப்பட்டிருக்கின்றது என்பதுடன் அரசிற்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானங்களையும் தோற்கடித்து அரசு வெற்றி கொண்டிருக்கின்றது. ஆக மொத்தத்தில் இந்த அரசிற்கு கூட்டமைப்பின் ஆதரவுடன் பெரும்பான்மை பலம் இருக்கின்றது என்பது உண்மை.
ஆனால் அதனை கூட்டமைப்பினரும் சரியாகப் பயன்படுத்தவில்லை. அதனால் அரசாங்கம் தமக்கு தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி வருகின்றது. குறிப்பாக கடந்த காலங்களில் தமிழ்த் தரப்பினருக்கு கிடைத்த பொன்னான வாய்ப்புக்களைச் சரியாகப் பயன்படுத்தாதது போன்று இன்றைக்கு கூட்டமைப்பினரும் தமக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள தவறியிருக்கின்றனர்.
மேலும், எமது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பெரும்பான்மைக் கட்சிகள் குறிப்பாக ஆளும் மற்றும் எதிர்த் தரப்புக்களுடன் இணக்கப்பாட்டுடனாவது செயற்பட்டிருக்க வேண்டும். ஆனால் கூட்டமைப்பினர் அப்படியும் செய்ய இல்லை.
அவர்கள் வைத்தால் குடம்பி எடுத்தால் மொட்டை என்பது போலவே ஆளும் மற்றும் எதிர்த் தரப்புக்களுடன் செயற்பட்டிருக்கின்றனர். இவ்வாறான நிலையில் தான் தேர்தல் நெருங்கும் வேளையில் தேர்தல் நாடகங்களும் அரங்கேற்றப்படுகின்றன என பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ். நிருபர் பிரதீபன்
No comments:
Post a Comment