ஜனாதிபதி விலக்கட்டும்,நாம் விலகவேமாட்டோம்! - ரிஷாத், அஸாத் ஸாலி, ஹிஸ்புல்லா திட்டவட்டமாகத் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, June 1, 2019

ஜனாதிபதி விலக்கட்டும்,நாம் விலகவேமாட்டோம்! - ரிஷாத், அஸாத் ஸாலி, ஹிஸ்புல்லா திட்டவட்டமாகத் தெரிவிப்பு

"எமது பதவிகளிலிருந்து நாம் ஒருபோதும் விலகவே மாட்டோம். நாம் பதவிகளிலிருந்து விலகுவதை எமது ஆதரவாளர்கள் துளியளவும் விரும்பவில்லை. எனவே, வேண்டுமானால் ஜனாதிபதி தனக்குரிய அதிகாரங்களைப் பயன்படுத்தி எம்மைப் பதவிகளிலிருந்து விலக்கட்டும்."

இவ்வாறு அமைச்சர் ரிஷாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அஸாத் ஸாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

மூவரையும் பதவி விலகக் கோரி நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் ஆரம்பித்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் சிங்கள - முஸ்லிம் இனக் கலவரமாக மாறும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் கோரியமையாலும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, மேல் மாகாண ஆளுநர் அஸாத் ஸாலி ஆகிய மூவரும் தமது பதவிகளிலிருந்து விலகவுள்ளனர் என அவர்களுக்கு நெருக்கமான வட்டாரங்கள் முதலில் தெரிவித்திருந்தன. எனினும், தத்தமது ஆதரவாளர்களை அவர்கள் சந்தித்த பின்னர் முடிவை மாற்றியுள்ளனர். 

இது தொடர்பில் வினவியபோதே அவர்கள் மூவரும் மேற்கண்டவாறு கூறினர்.

அவர்கள் மேலும் தெரிவித்ததாவது "உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் எமக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை. தாக்குதல்தாரிகளுடன் எமக்கு எந்தத் தொடர்பும் இல்லை. 

இந்தநிலையில், எந்தக் குற்றங்களும் செய்யாத எம்மைப் பதவி விலகுமாறு கூறுவதை ஏற்க நாம் தயாரில்லை. இனவாதிகளின் கூக்குரல்களுக்கு அஞ்சி நாம் எமது பதவிகளைத் துறக்கவேமாட்டோம். அவ்வாறு பதவி விலகினால் நாம் குற்றங்களை ஒப்புக்கொண்டமைக்குச் சமனாகும். 

நாம் பதவிகளிலிருந்து விலகுவதை எமது ஆதரவாளர்கள் துளியளவும் விரும்பவில்லை. எமக்குப் பதவிகளை ஜனாதிபதி வழங்கினார். வேண்டுமானால் ஜனாதிபதி தனக்குரிய அதிகாரங்களைப் பயன்படுத்தி எம்மைப் பதவிகளிலிருந்து விலக்கட்டும். எமது பதவிகளிலிருந்து நாம் ஒருபோதும் விலகவே மாட்டோம்" - என்றனர்.

Charles Ariyakumar Jaseeharan

No comments:

Post a Comment