உங்கள் அனைவரதும் பிரார்த்தனைகளால் எம்மைச் சூழ்ந்திருக்கும் அவநம்பிக்கை, சந்தேகம் ஆகியன நீங்க வேண்டும் - ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 4, 2019

உங்கள் அனைவரதும் பிரார்த்தனைகளால் எம்மைச் சூழ்ந்திருக்கும் அவநம்பிக்கை, சந்தேகம் ஆகியன நீங்க வேண்டும் - ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

இறை நம்பிக்கை, தொழுகை, நோன்பு, ஈகை, யாத்திரை ஆகிய பிரதான பண்புகளை அடிப்படையாகக் கொண்ட இஸ்லாமியர்கள் நோன்பை நிறைவு செய்யும் வகையில், கொண்டாடும் ரமழான் பண்டிகையை முன்னிட்டு இந்த வாழ்த்துச் செய்தியை விடுப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். 

இஸ்லாமியர்கள் இந்த நோன்பு காலத்தில் லௌகீக இன்பங்களிலிருந்து விடுபட்டு சமய நிகழ்வுகளில் ஈடுபட்டு சமூகத்தில் வறியவர்களுக்கும் நலிவுற்றவர்களுக்கும் தமது உழைப்பின் மூலம் கிடைத்த செல்வத்தின் ஒரு பகுதியை வழங்குவதானது, அனைத்து தெற்காசிய சமயத் தத்துவங்களும் போதிக்கும் ஆன்மீக நோக்கங்களின் பொதுப்பண்பை வெளிப்படுத்துவதாகவே அமைகின்றது.

அடுத்தவர்களது பசியின் துயரத்தை அனுபவபூர்வமாக உணர்ந்து அவர்களுக்கும் கொடுத்து வாழ்வதற்கு பழக்கும் ஒரு சமயத்தை பின்பற்றும் ஒரு சமூகம் உண்மையில் மனித குலத்திற்கு கிடைத்த கொடையாகும்.

உலகின் அனைத்து சமய தத்துவங்கள் மற்றும் நம்பிக்கைகள் ஆகியன மனித நாகரிகத்தின் நீண்ட பயணத்தில் எமக்குக் கிடைக்கப் பெற்றவையாகும். அந்த வகையில் மனிதநேயத்தின் பொதுப்பண்புகள் சமய நம்பிக்கைகளைக் கடந்து நிற்கின்றன. மானிடப் பண்புகளை உயர்வாக மதிக்க கற்றுக்கொடுக்கும் எந்தவொரு சமயமும் மானிடப் பண்பாட்டின் பொதுப்போக்கிலிருந்து விலகுவதற்கு அதன் அடியார்களுக்கு வழிகாட்டுவதில்லை. இஸ்லாமிய சமயமும் அத்தகையதொரு சமயமாகும்.

அத்தகையதொரு சமயத்தின் கடமைகளை நிறைவேற்றும் வகையில் நோன்பு நோற்று, உயரிய பண்பாடுகளை வெளிப்படுத்தும் வகையில் இன்றைய தினம் ஈகைத் திருநாளைக் கொண்டாடும் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் மகிழ்ச்சியான நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். அத்துடன், உங்கள் அனைவரதும் பிரார்த்தனைகளால் எம்மைச் சூழ்ந்திருக்கும் அவநம்பிக்கை, சந்தேகம் ஆகியன நீங்கி சகோதரத்துவத்துடன், கைகோத்து வாழக்கூடிய சிறந்ததோர் எதிர்காலம் அமையும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.

No comments:

Post a Comment