நோன்புப் பெருநாள் தியாகம் மற்றும் சமத்துவத்தின் மேன்மை பொருந்திய செய்தியை உலகிற்கு எடுத்தியம்பும் மிக முக்கியமான சமயப் பண்டிகையாகும் - பிரதமர் ரணில் விக்கிரமசிங்க - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 4, 2019

நோன்புப் பெருநாள் தியாகம் மற்றும் சமத்துவத்தின் மேன்மை பொருந்திய செய்தியை உலகிற்கு எடுத்தியம்பும் மிக முக்கியமான சமயப் பண்டிகையாகும் - பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

இன, மத பேதமின்றி ஒரே இலங்கை மக்களாக ஒற்றுமையுடன் எமது தாய் நாட்டின் முன்னேற்றத்திற்காக செயலாற்றுவோம். சுதந்திரம், சமத்துவம், மானிட கௌரவம் மேலோங்கி நிற்கின்ற சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். 

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது ரமழான் மாதம் இஸ்லாத்தின் மையக் கருத்தினையும் மானிட, சமூகப் பெறுமானங்களையும் சிறப்பாக அறிந்து கொள்வதற்கான சிறந்த சந்தர்ப்பம் ஆகும். 

நீண்ட காலமாக இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் அந்த சமயப் பெறுமானங்களை முன்னிலைப்படுத்தி வாழ்ந்து வந்துள்ளதை நாம் அவதானித்துள்ளோம். 

ஒரு மாத காலமாக நோன்பு நோற்று, புதிய பிறை கண்ட பின்பு கொண்டாடப்படும் ஈதுல் பித்ர் எனப்படும் நோன்புப் பெருநாள் தியாகம் மற்றும் சமத்துவத்தின் மேன்மை பொருந்திய செய்தியை உலகிற்கு எடுத்தியம்பும் மிக முக்கியமான சமயப் பண்டிகையாகும். 

பேராசை, இச்சை, சுயநலம் போன்ற துர்க்குணங்களைக் கட்டுப்படுத்தி, மனிதாபிமானம், தியாகம் போன்ற நற்பண்புகளை மேலோங்கச் செய்வதற்கு இதன்போது முக்கிய கவனம் செலுத்தப்படுகிறது.

முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த சிறிய குழுவொன்று தமது சமயத்தில் காணப்படும் இந்த உயரிய மையக் கருத்துக்களைப் புறந்தள்ளி விட்டு அடிப்படைவாதத்தை நோக்கிச் சென்றமையின் ஆபத்தான விளைவு உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் மூலம் புலனாகிறது.

இஸ்லாத்தின் உண்மையான மையக் கருத்துக்கு மாசு கற்பிக்கும் இவ்வாறான அடிப்படைவாதிகள் தொடர்பாக அவதானத்துடன் இருக்குமாறு உண்மையான முஸ்லிம் பக்தர்களிடம் வேண்டிக் கொள்கிறேன். இலங்கையிலும், முழு உலகிலும் வாழும் சகோதர முஸ்லிம் மக்களுக்கு அமைதியும் நல்லிணக்கமும் மிகுந்த பெருநாளாக அமையட்டும் என உளப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.

No comments:

Post a Comment