முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் எனது அமைச்சர் பதவியினை இராஜினாமா செய்துள்ளேன் - செய்யித் அலி ஸாஹிர் மௌலானா - News View

About Us

About Us

Breaking

Monday, June 3, 2019

முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் எனது அமைச்சர் பதவியினை இராஜினாமா செய்துள்ளேன் - செய்யித் அலி ஸாஹிர் மௌலானா

எஸ்.எம்.எம். முர்ஷித்
கடந்த ஏப்ரல் 21 ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் பாரபட்சம் அற்ற விசாரணைகளை முன்னெடுக்க முழுமையான ஒத்துழைப்பினை நல்கும் பொருட்டும், முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் சக அமைச்சர்கள் 8 பேருடன் நானும் எனது அமைச்சர் பதவியினை இராஜினாமா செய்துள்ளேன் .

இலங்கை வாழ் முஸ்லிம்கள் எப்போதும் தமது தாய் நாட்டை நேசிப்பவர்களாகவும் நாட்டின் அபிவிருத்திக்கும் இறையாண்மையை பாதுகாப்பதிலும் எண்ணற்ற வழிகளிலும் தமது பங்களிப்பினை வழங்கி வந்தார்கள் என்பது மறுக்க முடியாத வரலாறு.

எம்மை தங்களது பிரதிநிதிகளாக ஆக்கிய மக்களது எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் வண்ணம் செயற்படுவது எமது தலையாய கடமையாகும், இந்த நாட்டை பிளவுபடுத்தவும், பிரச்சனைகளை தோற்றுவிக்கவும் முனையும் ஒரு சில விஷமிகளது நிகழ்ச்சி நிரலுக்கு ஒரு போதும் நாம் இடமளித்து விடக் கூடாது, நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

இந்த தேசத்திற்காக முஸ்லிம் சமூகம் ஆற்றிய பங்களிப்புக்கள் எண்ணிலடங்காதவை, இந்த நாட்டிலே நிரந்தர சமாதானத்தை தோற்றுவிப்பதற்காகவும், அமைதியை நிலை நிறுத்துவதற்காகவும் 2004 ஆம் ஆண்டிலேயே எனது உயிரை துச்சமென மதித்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் தியாகம் செய்த ஒருவன் என்பதை என்றும் பெருமையுடன் நினைவு கூறுகிறேன்.

அவ்வாறு பலரின் தியாகங்கள் மூலமாக பெறப்பட்ட சமாதானத்தினை கடந்த 43நாட்களுக்கு முன் சில விஷமிகள் சிதைத்து விட்டார்கள், அவர்களது இந்த ஈனத்தனமான செயற்பாட்டினை இலங்கை வாழ் 2 மில்லியன் முஸ்லிம் மக்களும் வன்மையாக கண்டித்ததுடன், அவர்களுக்கு எதிராக ஒன்றுபட்டு நாட்டை நேசிக்கும் முஸ்லிம் மக்கள் என்றும் தீவிரவாதத்துக்கு துணை போனவர்கள் கிடையாது, இஸ்லாம் அமைதியையும் ,சகோதரத்துவத்தையும், தேசத்தின் மீதான பற்றையும் எடுத்தியம்பும் மார்க்கம் என்பதை என்றும் நாம் உணர்த்தி வருகிறோம்.

இந்நிலையில், எமது மக்களது பாதுகாப்பும் இதர உரிமைகளும் கேள்விக்குட்படுத்தப்பட்டு நிற்கின்ற இதருணத்திலே, அவர்கள் எம்மை தமது பிரதிநிதிகளாக ஆக்கியது இந்தப் பதவிகளுக்கு ஊடாக வெறும் அபிவிருத்தி செயற்பாடுகளையும் இதர அனுகூலங்களையும் அடைந்து கொள்வதற்காக அல்ல, அவர்களது பாதகாப்பு மற்றும் உரிமைகளுக்கான உத்தரவாதத்தினை உறுதி செய்ய முடியாத நிலையில் அந்த பதவிகளை வைத்து அழகு பார்ப்பதில் எந்த பலனுமே இல்லை என்ற அடிப்படையில், இதற்கான நிரந்தர தீர்வினை வழங்கி எமது மக்களின் இருப்பிற்கான உத்தரவாதத்தினை எதிர்பார்த்தவர்களாக ஒன்றுபட்டு எமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளோம்.

(புகழ் அனைத்தும் இறைவனுக்கே)...

இந்நிலையில் மக்கள் மிகவும் நிதானத்துடனும் சகிப்புத்தன்மையுடனும் நடந்து கொள்ள வேண்டும் என வேண்டிக் கொள்வதுடன், இந்த வரலாற்று ரீதியான ஒற்றுமையானது மக்களிடையேயும், அரசியல் பிரதிநிதிகள் மத்தியிலும் என்றும் நிலைக்க வேண்டும், நாட்டில் அமைதி, சௌஜன்யம், சகோதரத்துவம் மீளக் கட்டி எழுப்பப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

அனைத்து உறவுகளுக்கும் எனது இதயம் நிறைந்த ஸலாம் - அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 
அனைவர் மீதும் சாந்தியும் சமாதானமும் நிலவட்டும்.

என்றும் உங்கள் 
செய்யித் அலி ஸாஹிர் மௌலானா, 
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்,
மட்டக்களப்பு மாவட்டம்.

No comments:

Post a Comment