ஒருவர் பிறப்பின் போதே அவருக்கான தேசிய அடையாள அட்டை இலக்கத்தை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக உள்ளூராட்சி சபைகள், மாகாண சபைகள் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
மாத்தளை நகரசபையில் நேற்றுமுன்தினம் (01) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் இங்கு கருத்து வெளியிடுகையில், பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னர் இடம்பெற்றிருந்த சுற்றிவளைப்புகளின் போது ஒரு தேசிய அடையாள அட்டை இலக்கத்திற்கு 10 இற்கும் அதிகமான பெயர்களில் அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டிருந்தன.
இவை மிகவும் பாரதூரமானதும் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானதுமாகும். இவ்வாறு பலருக்கு அதிகமான தேசிய அடையாள அட்டைகள் உள்ளன. இதற்கு கடந்த காலத்தில் இருந்த அனைத்து அரசாங்கங்களும் பொறுப்புக்கூற வேண்டும்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் போதே அவருக்கான தேசிய அடையாள அட்டை இலக்கத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த இலக்கம் பிறப்புச்சான்றிதழுடன் இணைக்கப்படும். இதற்கான வேலைத்திட்டத்தை விரைவில் ஆரம்பிக்கவுள்ளோம்.
புதிய தொழில்நுட்பத்தின் பிரகாரம் இந்த வேலைத்திட்டத்தின் மூலம் அனைவருக்கும் ஒரு தனித்துவமான தேசிய அடையாள அட்டை இலக்கத்தை பெற்றுக்கொடுக்க 40 பில்லியன்கள் வரைதான் செலவாகும்.
அந்தத் தொகையை ஒதுக்கித்தருமாறு பிரதமரிடம் கோரியுள்ளோம். செலவாகும் 40 பில்லியன் ரூபா தொகையை ஒரு வருட காலத்திற்குள் மீண்டும் ஈட்டிக்கொள்ள முடியும் என்றார்.
சுப்பிரமணியம் நிஷாந்தன்
No comments:
Post a Comment