கிழக்கு மாகாணத்தில் இன விரிசல்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மாகாணத்திலுள்ள மாநகர சபைகள், நகர சபைகள், பிரதேச சபைகள் அனைத்துக்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும், மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் என். மணிவண்ணன் பணிப்புரை விடுத்து உத்தரவுக் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளார்.
அவரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில், “கிழக்கு மாகாணத்திலுள்ள சில உள்ளூராட்சி மன்றங்களில் தேசிய இனங்களுக்கிடையிலான ஒற்றுமையையும் நல்லுறவையும் பாதிக்கும் வகையிலான பிரேரணைகளை முன்வைத்தல், தீர்மானங்கள் நிறைவேற்றல், கலந்துரையாடல்களில் ஈடுபடுதல் போன்ற விடயங்கள் இடம்பெறுவதாக பிரதேச உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களாலும் பொது அமைப்புக்களினாலும் எனது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
எனவே, இவ்வாறான விடயங்களை நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்குவதற்கு முன்னர் அது குறித்து பூரணமாகப் பரிசீலித்துப் பார்த்து பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய பிரேரணைகளைத் தவிர்க்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிவுறுத்தல் மட்டக்களப்பு, கல்முனை, அக்கரைப்பற்று ஆகிய மாநகர சபைகளுக்கும், திருகோணமலை, கிண்ணியா, ஏறாவூர், காத்தான்குடி, அம்பாறை உள்ளிட்ட நகர சபைகளுக்கும், கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பிரதேச சபைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment