ரிஷாட், ஹிஸ்புல்லாஹ்வை பதவி விலக வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் - News View

About Us

About Us

Breaking

Saturday, June 1, 2019

ரிஷாட், ஹிஸ்புல்லாஹ்வை பதவி விலக வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம்

கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் மற்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி, மட்டக்களப்பு நகரிலுள்ள காந்தி பூங்காவில் அடையாள உண்ணாவிரதப் போராட்மொன்று இன்று (01) காலை தொடக்கம் இடம்பெற்று வருகின்றது.

முற்போக்கு தமிழர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. கிருஸ்ணப்பிள்ளை (வெள்ளிமலை), முன்னாள் மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரட்ணம், மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் எஸ். சோமசுந்தரம், தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் மோகன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
ஒரு இனத்துக்கு ஆதரவாக கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் செயற்பட்டு வருவதோடு, தமிழ் மக்களுக்கு எதிராகவும் செயற்பட்டு வருகின்றார். தமிழ் மாணவர்களின் கல்வியை சீரழிக்கும் நோக்கில் இவர் அண்மையில் செயற்பட்டதோடு, இவரது சகல நடவடிக்கைகளும் தமிழர்களுக்கு எதிராக உள்ளது. 

இதனால் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வை, ஜனாதிபதி பதவி விலக்க வேண்டுமென்று கோரிக்கை விடுப்பதோடு, ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் உடனடியாக பதவி விலக வேண்டுமெனவும் வலியுறுத்தி இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தினதேரரின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், இந்த அடையாள உண்ணாரவிதப் போராட்டம் இடம்பெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டு நாட்டின் பாதுகாப்பு ஸ்திரப்படுத்தப்படுவதோடு, இன்னும் பயங்கரவாதிகள் இருப்பதாகவும் அவர்கள் அனைவரையும் கைதுசெய்ய வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எம்.எஸ்.எம். நூர்தீன் 

No comments:

Post a Comment