ஹபாயா அணிய முடியாதென்று சுற்றுநிருபத்தில் எங்கே இருக்கிறது? - News View

About Us

About Us

Breaking

Friday, May 31, 2019

ஹபாயா அணிய முடியாதென்று சுற்றுநிருபத்தில் எங்கே இருக்கிறது?

29.05.2019 இல் வெளியிடப்பட்ட 13/2019ம் இலக்க பொது நிர்வாக சுற்றறிக்கையான “அரச அலுவலகங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல்” என்ற சுற்றறிக்கையில் அரச உத்தியோகத்தர்களின் ஆடை, சேவை பெறுநர்களின் ஆடை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் சுற்றறிக்கையில் சரியான விளக்கமில்லை என்று கூறுபவர்களே ஹபாயா அணியத்தடை என்றும் இதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப் போவதாகவும் தெரிவித்துள்ள நிலையில் சமூக வலைத்தளங்களில் இது தொடர்பான விமர்சனங்களும், முஸ்லிம்களின் கலாசார ஆடை எது என்று பொருத்தமில்லாத காலத்தில் தேவையற்ற விவாதங்களும் இடம் பெறுகின்றன.

ஏப்ரல் 21 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பின் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட 2120/5 அதிவிசேட வர்த்தமானி குறிப்பிற்கு மேலதிகமாக வெளியிடப்பட்ட 29.04.2019ஆந் திகதிய 2121/1 மற்றும் 13.05.2019ஆந் திகதிய 2123/4ம் இலக்க அதி விசேட வர்த்தமானி குறிப்புகளில் பொது இடங்களில் முகத்தை மறைத்தல் தடை என்பது தொடர்பில் பேரினவாதிகள் நிகாப், புர்கா என்பவை மட்டுமல்ல ஹிஜாப், பர்தா போன்றவையும் தடை என பிழையான கருத்தை விதைக்கப் பார்த்தார்களோ அதேபோல் நாங்களும் எங்களுக்கெதிராக தடையை விதிக்கப்பார்க்கிறோம்.

இச்சுற்று நிருபத்தின் மூலம் அதிகம் அசௌகரியங்களை அடையப் போகிறவர்கள் சிங்களப் பெண்களே. ஏனெனில், சுற்றுநிருபத்தின் முதலாவது பந்தியில் பெண் உத்தியோகத்தர்களின் ஆடை தொடர்பில் அவர்கள் சேலை அல்லது கண்டிய சேலை (Osari) அணிய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் 5ஆவது பந்தியில் ஏதாவது சமய மரபுக்கேற்ப ஆடைகளை அமைத்துக் கொண்டுள்ள உத்தியோகத்தர்கள் மேலே 1 இல் குறிப்பிடப்பட்ட உடையை அணிந்து சமய அடையாளத்தை உறுதிப்படுத்தும் விதமாக முழு முகத்தையும் தெளிவாக அடையாளம் காணக்கூடிய வகையில் (இது extra ordinary gazette 2123/4 இல் குறிப்பிடப்பட்டது) ஆடை அணிகலன் ஒன்றை பயன்படுத்த முடியும் எனக்குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, ஏற்கனவே சில பெண்கள் அணிவது போல சாரி அணிந்து அதன் மேலாக அபாயா, ஹிஜாப் அணிவதைக் குறிப்பதாக கொள்ள வேண்டும், சல்வார், ஜீன்ஸ் & T.Shirt மற்றும் house coat க்கு மேலால் அபாயா அணிய முடியாது என்றே நாங்கள் கொள்ள வேண்டுமே தவிர எங்களுக்கெதிரான வகையில் இதை எடுக்கக்கூடாது.

நடைமுறைப்படுத்தலில் சில துவேசிகளால் பிரச்சினை உருவாகும் வேளையில் இது சம்பந்தமாக அரசியல் மற்றும் சட்டரீதியான உதவிகளைப் பெற வேண்டும்.

மேலும் தேவையின் நிமித்தம் அரச அலுவலகங்களுக்கு வருபவர்கள் முழு முகமும் தெரியும் வகையில் எந்த ஆடையும் அணிந்து வரலாம் என்றே சுற்று நிருபம் கூறுகிறது.

இதன்படி சிங்கள பெண்களில் அநேகமானோர் சாரி இல்லாமல் நாகரீக உடைகளை அணிந்து கடமைக்கு வருவது வழக்கம், அவர்கள் இச்சுற்று நிருபத்தால் அதிகம் பாதிக்கப்படப் போகிறார்கள்.

மற்றும் கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகள் சாரி அணிந்து அதற்கு மேல் அவர்களது மத சார்பான ஆடை அணிவது சாத்தியமற்றது, அதனால் இச்சுற்று நிருபத்தில் விரைவில் மாற்றம் கொண்டு வரப்படலாம்.

என்றாலும் பெண்கள் தளர்வான (இறுக்கமற்ற) அபாயா அணிந்து முகம் தெரிய தலையை மூடுவது இஸ்லாமிய மத சார்பான ஆடை என்பதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அரசுக்கு தெளிவுபடுத்த வேண்டும். எல்லோருமே அபாயா அணியும் சாத்தியமும் ஏற்படலாம்.

எஸ். ஜவாஹிர் சாலி (SLEAS)
முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்.
முன்னாள் பிரதி வலயக்கல்விப் பணிப்பாளர்.

No comments:

Post a Comment