உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களை தொடர்ந்து கடுமையாக வீழ்ச்சி கண்டுள்ள சுற்றுலாத்துறையை மீளக் கட்டியெழுப்பும் வகையில் 1.5 பில்லியன் ‘சஞ்சாரக பொட்டோ’ என்ற நிவாரணப் பொதியை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
நிதி அமைச்சில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலானர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் இங்கு மேலும் தெரிவித்தாவது, கடந்த மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் காரணமாக எமது நாட்டின் சுற்றுலாத்துறை கடுமையாக வீழ்ச்சி கண்டுள்ளது. அதனை மீளக் கட்டியெழுப்பும் வகையில் இந்த நிவாரண பொதியை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.
சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகள் இந்த ‘சஞ்சாரக பொட்டோ’ என்ற நிவாரணப் பொதியினூடாக சலுகைகளைப் பெற்றுக்கொள்ள முடியும். நிவாரண பொதியானது கடன் அடிப்படையில்தான் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் ஊடாக ரூபா. 5 இலட்சம் வட்டியில்லாக் கடனாக பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது. இதனை மூன்று வருடகாலப்பகுதியில் செலுத்த வேண்டும் என்பதுடன், முதல் 12 மாதம் சலுகைக்காலமும் வழங்கப்படும். பிரதேச அபிவிருத்தி வங்கியினூடாக மாத்திரமே மேற்படி கடன் பெற்றுக் கொடுக்கப்படும்.
எல்ல மற்றும் மிரச்ச போன்ற பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள சுற்றுலா வீழ்ச்சியால் பாரிய இழப்புகள் ஏற்பட்டுள்ளன. இவர்களின் வர்த்தக நடவடிக்கைகளும் கடுமையாக வீழ்ச்சி கண்டுள்ளது. அதற்காகவே இந்த நிவாரணப் பொதியை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.
பொலிஸாரின் உறுதிப்படுத்தல்களுடன் எதிர்வரும் ஜுன் 10 ஆம் திகதி முதல் இந்த நிவாரணக் கடனைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.
லக்ஷ்மி பரசுராமன்
No comments:
Post a Comment