களு கங்கையில் நீரில் மூழ்கி இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த ஒருவர் காணாமல் போயுள்ளார். களுகங்கையின் இரத்தினபுரி கிரியல்ல பிரதேசத்திலுள்ள ஹரணியாவக பகுதியிலேயே இப்பரிதாப சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறிப்பிட்ட இடத்தில் இன்று (03) அதிகாலையில் தனது சகாக்கள் மூவருடன் சேர்ந்து இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த போது ஒட்சிசன் தாங்கிய கொம்பிரஷரின் உதவியுடன் இவர் நீரில் மூழ்கி இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்டதாக கிரியல்ல பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனவர் அவிசாவளை பிரதேசதத்தைச் சேர்ந்த பிரியந்த என்பவராவார். காணாமல் போனவர் உட்பட இரத்தினக்கல் அகழும் முயற்சியில் ஈடுபட்ட மேலும் 3 பேர் சுமார் 35 அடி ஆழமான ஆற்றின் நடுப்பகுதியில் இருந்து இரத்தினக்கல் கனிய மண்ணை அகழ்ந்து வந்து அதனை கழுவும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து குறித் நபர், நீருக்குள் நுழைந்துள்ளார். நீண்ட நேரமாகியும் கரைக்கு வந்து சேராமையினால் அச்சமடைந்த சகாக்கள் அவரை தேடும் பணியில் ஈடுபட்ட போதும் அம்முயற்சி வெற்றியளிக்காமையினால் பொலிசார் மற்றும் அயலவர்களின் உதவியுடன் காணாமல் போனவர்களை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று (03) மாலை வரை இவர் தொடர்பான எந்த வித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிசார் தெரிவித்தனர்.
இரத்தினபுரி நிருபர் - பாயிஸ்
No comments:
Post a Comment