வாகரைப் பிரதேசத்தில் கனிய மண்ணகழ்வு தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தினை நிறுத்துமாறு ஆர்ப்பாட்டம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 10, 2019

வாகரைப் பிரதேசத்தில் கனிய மண்ணகழ்வு தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தினை நிறுத்துமாறு ஆர்ப்பாட்டம்

எஸ்.எம்.எம்.முர்ஷித்
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேசத்தில் கனிய மண்ணகழ்வு தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தினை நிறுத்துமாறு வலியுறுத்தி இரண்டாவது தடவையாக இன்று புதன்கிழமை (10.04.2019) பிரதேச மக்கள் வாகரைப் பிரதேச செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கதிரவெளி பிரதேச பொது மக்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புக்களால் இக்கவணயீர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இன்று மட்டக்களப்பு திருமலை வீதியில் கூடிய பொது மக்கள் வாகனப் பேரணியாக கதிரவெளியூடாகச் சென்று பனிச்சங்கங்கேணி பிரதேசத்திற்குச் சென்று, அங்கிருந்து மீண்டும் வாகரை பிரதான வீதியூடாக வாகரைப் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் வீதியில் நின்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் போது, வீதியில் பொது மக்களுக்கு கனியமணல் தொழிற்hலை அமைப்பதினால் ஏற்படும் பாதிப்புத் தொடர்பான துண்டுப்பிரசுரமும் வழங்கப்பட்டது.

மக்கள் செறிந்து வாழும் பால்சேனை வடக்கு தொடக்கம் வெருகல் வரையான கதிரவெளி, புதூர், புச்சாக்கேணி ஆகிய கிராமங்களை உள்ளடக்கியதாக கனிய மணல் அகழ்வு மற்றும் தொழிற்சாலை அமைக்கும் ஆரம்ப வேலைகள் அண்மையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக தமக்கு எந்தவிதமான தெளிவூட்டல்களும் இல்லையென்றும், இத்தொழிற்சாலை அமைப்பதனால் சூழல் பாதிப்பு, பௌதீக, நீர், நில, வளிச்சூழல் பாதிப்படைவதாகவும், கடல் வளம் பாதிப்படையுமென்றும் நிலத்தடி நீர்ப் பாதிப்பிற்குள்ளாகி எமது எதிர்காலச் சந்ததியினரின் வாழ்க்கை பாதிப்படையுமமென்றும் தெரிவிக்கின்றனர்.
இதன் போது அரச அதிகாரிகளே, அரசியல்வாதிகளே, எமது பிரதேச மக்களைப் பாதிக்கக்கூடிய கனிய மணல் (இல்மனைட்) அகழ்வுப் பணியினை உடனடியாகத் தடுத்து நிறுத்தங்கள். எமது தாய் மண் எங்களை வாழ வைக்கும் மண். எங்களுக்கு சோறு போடும் மண். விற்காதே, விற்காதே தாய் மண்ணை விற்காதே. இல்மனைட் கம்பனியைத் தடை செய், சுரண்டாதே சுரண்டாதே, எங்களின் வளத்தைச் சுரண்டாதே என்பன போன்ற வாசகங்களை எழுதிய பதாதைகளை கையில் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது கோரிக்கை அடங்கிய மகஜரை வாகரை பிரதேச செயலாளர் எஸ்.கரனிடம் கையளித்தனர். மகஜரைப் பெற்றுக்கொண்ட பிரதேச செயலாளர், இது தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கு மேலதிக நடவடிக்கைக்காகச் சமர்ப்பிப்பதாகத் தெரிவித்தார். இதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

No comments:

Post a Comment