மட்டக்களப்பு கடல் பிரதேசத்தில் 4 வருடங்களாகக் காணாமல் சென்றிருந்த பெறுமதி மிக்க நீர் மூழ்கி கண்டுபிடிக்கப்பட்டது - News View

About Us

About Us

Breaking

Monday, April 1, 2019

மட்டக்களப்பு கடல் பிரதேசத்தில் 4 வருடங்களாகக் காணாமல் சென்றிருந்த பெறுமதி மிக்க நீர் மூழ்கி கண்டுபிடிக்கப்பட்டது

கடலில் மிகவும் பெறுமதியான தரவுகளைப் பெற்றுக் கொள்வற்காக தேசிய நீரியல் வளத்துறை அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (NARA) சொந்தமான ஒரேயொரு நீர் மூழ்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போயிருந்த இதனைக் கண்டுபிடிக்க 4 வருடங்கள் சென்றமை குறிப்பிடத்தக்கது. இதனைக் கண்டுபிடிப்பதற்காக NARA இனால் பல நடவடிக்கைகள் இவ்வளவு காலமாக எடுக்கப்பட்டிருந்தாலும், NARA நிறுவனத்தின் நீர்ப் பாரம்பரியப் பிரிவும், கடற்படையின் நீர்ப்பிரிவும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் மூலமே இது கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா பாராட்டுதல் தெரிவித்துள்ளது.

இலங்கையைச் சூழவுள்ள கடலில் உள்ள மிகவும் பெறுமதியான தரவுகளைச் சேகரிக்க உதவும் இந்த நீர் மூழ்கியானது, அமெரிக்காவினால் வழங்கப்பட்டதாகும். இது மட்டக்களப்பு பிரதேச கடலில் தரவுகளை சேகரித்துக் கொண்டு இருக்கும் போது சில மீனவர்களின் நடவடிக்கை காரணமாக காணமல் போனது. 

NARA நிறுவனத்திற்குச் சொந்தமான ஆராய்ச்சிக் கப்பல் மட்டக்களப்பு பிரதேச கடலுக்குக் கீழே ஆராய்ச்சிகளைச் செய்து கொண்டிருக்கும் போதே இந்த நீர் மூழ்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

அந்த மூழ்கிகள் சமுத்ரிகா ஆராய்ச்சிக் கப்பலின் உதவியுடன், திருகோணமலைத் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், அந்த மூழ்கியை காலிக்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடந்துள்ளன.

கடலின் உஷ்ணம், கடலில் இருக்கும் மீன்களின் எண்ணிக்கை போன்ற தரவுகள் இந்த நீர் மூழ்கியில் சேமிக்கப்படும். இதன் மூலம் மீன்பிடித் துறையின் எதிர்காலத்தில் பல திட்டங்களை செயற்படுத்த முடியும் என்று நீர்ப் பாரம்பரியப் பிரிவு தெரிவிக்கிறது. 

கண்டுபிடிக்கப்பட்ட நீர் மூழ்கியிலிருந்து 4 வருடங்களுக்கான தரவுகள் சேமிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும், கண்டுபிடித்த நீர்ப்பாரம்பரியக் குழு தெரிவித்துள்ளது. 

இவ்வாறு கடலுக்குள் மிகவும் பெறுமதியான தரவுகளை சேகரிக்கும் நீர் மூழ்கியானது இலங்கையில் NARA இனைத் தவிர வேறு எந்த நிறுவனத்திடமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ரிஹ்மி ஹக்கீம்,
கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களம்

No comments:

Post a Comment