பல மாத காலமாக இறக்குவானை மாவட்ட வைத்தியசாலையில் பெருமளவு மருந்து தட்டுப்பாடு நிலவுவதால் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளர்களும் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெறும் நோயாளர்களும் அதிக அளவு பாதிக்கப்பட்டு பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இந்த வருட முதல் கட்டத்திற்கு தேவையான மருந்து வகைகள் வைத்தியசாலைக்கு கிடைக்காமையே இந்த மருந்து தட்டுப்பாட்டுக்கு காரணமாக அமைந்துள்ளது. இரத்த அழுத்தம், நீரழிவு, இரத்தத்தில் கொழுப்பு கூடுதல் ஆகிய நோய்களுக்காகவும் அவசர நோயாளிகளுக்காக பெற்றுக் கொடுக்கும் தடுப்பூசிகளும் மருந்து வகைகளும் அதிக அளவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ஆஸ்பத்திரி வட்டாரம் தெரிவிக்கின்றன.
இறக்குவானை நகரம் உட்பட அதனை சூழவுள்ள கஷ்ட கிராம பகுதிகளில் வாழும் மக்களும் தோட்டப் பகுதி தொழிலாளர் மக்களும் இறக்குவானை வைத்தியசாலையிலேயே சிகிச்சை பெற நாளாந்தம் வருகின்றனர். வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு மருந்து வகைகளை பணம் கொடுத்து வாங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக நோயாளர்களின் பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.
வைத்தியசாலையில் நிலவும் மருந்து பற்றாக்குறை சம்பந்தமாக வைத்தியசாலை அதிகாரிகள் சப்ரகமுவ மாகாண வைத்திய விநியோகப் பிரிவுக்கு அறிவித்தும் இதற்கான தீர்வு கிடைக்கவில்லை என தெரிவித்தனர்.
இது விடயமாக இரத்தினபுரி மாவட்ட வைத்திய விநியோக பிரிவின் தலைவர் டப்ளிவ். பந்துல விஜயசிங்க கருத்து தெரிவிக்கையில், எமது நிறுவனம் மூலம் வருடாந்த மருந்து கணக்கெடுப்பு காரணமாக கடந்த மாதங்களில் மருந்து வகைகள் விநியோகிக்கப்படவில்லை.
எனினும் தற்பொழுது சகல வைத்தியசாலைகளுக்கும் தேவையான மருந்து வகைகளை விநியோகிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இறக்குவானை வைத்தியசாலைக்கும் தேவையான மருந்து வகைகள் வழங்கப்படும். எதிர்வரும் தினங்களில் இந்த பிரச்சினைக்கு விரைவாக தீர்வு ஏற்படும் என அவர் தெரிவித்தார்.
தினகரன்
No comments:
Post a Comment