காணாமல் போன உறவுகளின் உணர்வுகளுக்கு மறப்போம் மன்னிப்போம் என்பதனூடாக தீர்வுகளை காண முடியாது - டக்ளஸ் தேவானந்தா எம்.பி - News View

About Us

About Us

Breaking

Friday, March 1, 2019

காணாமல் போன உறவுகளின் உணர்வுகளுக்கு மறப்போம் மன்னிப்போம் என்பதனூடாக தீர்வுகளை காண முடியாது - டக்ளஸ் தேவானந்தா எம்.பி

தமிழரின் வலிகளை போக்கும் வழிகளை கண்டறிந்து தீர்வு வழங்குவதே அவசியம் நாட்டில் நடைபெற்ற பல கசப்பான சம்பவங்களுக்கு மறப்போம் மன்னிப்போம் என்ற வார்த்தை பரிகாரமாக இருந்தாலும் அதை ஏற்பதற்கு கடந்த காலத்தில் தமிழ் மக்கள் பட்ட வலிகளுக்கும் வதைகளுக்கும் தீர்வாக உண்மைகள் கண்டறியப்பட்டு நிரந்தர தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதனூடாக இது சத்தியமாகுமென தான் நம்புவதாக ஈ.பி.டி.பி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா எம்.பி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் அரசாங்கமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் மக்களிடையே நம்பிக்கையூட்டும் வகையிலான புறச் சூழ்நிலையை உருவாக்க தவறி விட்டனர். அது மட்டுமன்றி இதை முன்னெடுப்பதில் கூட இவ்விரு தரப்பினரும் அக்கறையும் கொள்ளவில்லை. இதுவே இன்றுவரை பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியாது இருக்கின்றன.

தமிழ் மக்களது ஒவ்வொரு பிரச்சினைகளையும் தீரா பிரச்சினைகளாக்கி அது தொடர வேண்டும் என்ற நோக்குடனேயே இதர தமிழ் தரப்பினர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் நாம் இவற்றுக்கான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காண்பதில் தான் எமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம். அதற்காக நாம் அன்றாடப் பிரச்சினைகளுக்கான தீர்வு அபிவிருத்திக்கான தீர்வு அரசியலுரிமைக்கான தீர்வு என்ற மூன்று வழிமுறைகளையும் முன்னிறுத்தி எமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம்.

இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வீதியில் போராடுகின்றனர். இவர்களது பிரச்சினைக்கான தீர்வுகளை பெற்றுக் கொள்வதில் அரசோ அன்றி தமிழ் மக்களின் அரசியல் அதிகாரத்தை தம்வசம் கொண்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பினரோ முயற்சிகளை மேற்கொள்ளவில்லை.

காணாமல் போன உறவுகளின் உணர்வுகளுக்கு மறப்போம் மன்னிப்போம் என்பதனூடாக தீர்வுகளை காணமுடியாது. அவர்களது வலிகளை போக்குவதற்கான வழிவகைகளை கண்டு பிடித்து தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முயற்சிக்க வேண்டும்.

ஆனால் அதிகாரங்களை தம்மிடம் கொண்டுள்ள தமிழ் அரசியல் தரப்பினர் சந்தர்ப்பங்கள் கிடைக்கும்போது அனைத்தையும் தவற விட்டு இன்று மறப்போம் மன்னிப்போம் என்று கூறுவது நியாயமானதல்ல.

1983 ஆம் ஆண்டு முதல் வன்முறைகளால் காணாமல் போனவர்களது உறவுகளுக்கு இன்றுவரை நியாயமான எந்தவொரு தீர்வையும் மாறிமாறி வரும் அரசுகள் பெற்றுக் கொடுக்கவில்லை. இதற்கு தமிழ் மக்களின் தரப்பிலிருக்கும் சுயநல அரசியல் தலைமைகள்தான் காரணம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment